May 10, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

3,000 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் கடத்தல்; முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இருவர் கைது!

இலங்கையில் மார்ச் மாதம் அளவில் பறிமுதல் செய்யப்பட்ட 3,000 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் கடத்தல் விவகாரத்துடன் சென்னையில் வசிக்கும் இரண்டு முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு தொடர்பு இருப்பதாக இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த வருடம் மார்ச் மாதம் 25 ஆம் திகதி இந்திய கடலோர காவல்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் மினிகோய் தீவுக்கு அருகில் 06 இலங்கையருடன் இலங்கை படகு பறிமுதல் செய்யப்பட்டது.

கைப்பற்றப்பட்ட படகில் 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 300 கிலோகிராம் ஹெரோயினுக்கு மேலதிகமாக ரஷ்ய உற்பத்தியான ஐந்து AK 47 ரக துப்பாக்கிகளும், அதற்கு பயன்படும் 1000 துப்பாக்கி ரவைகளும் 9 மி.மீ வெடிமருந்துகளும் மீட்கப்பட்டிருந்தன.

இந்த சம்பவம் தொடர்பில் இந்தியாவில் தீவிரவாத குற்றங்களை எதிர்க்க இந்திய அரசால் ஒன்றிய அளவில் நிறுவப்பட்டுள்ள புலனாய்வு அமைப்பான தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

கடந்த 13 நாட்களில் சம்பம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரிய வந்துள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்போது இரு சந்தேக நபர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதையும் பாகிஸ்தானில் ஒரு சந்தேக நபர் உட்பட வெளிநாட்டவர்களால் தாம் இயக்கப்படுவதையும் அவர்களுடனான தொடர்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

பாகிஸ்தான் பிரஜை அதிக அளவில் ஹெராயின், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்கியுள்ளதையும் மீன்பிடி கப்பல்களில் போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தலில் ஈடுபட்டவர்களையும் தேசிய புலனாய்வு அமைப்பு அடையாளம் கண்டுள்ளது.

இவர்களின் சர்வதேச இரகசிய வலையமைப்பு மற்றும் தொடர்பாடல் முறை பற்றிய தகவல்களையும் விசாரணைகளில் இருந்து பெற்றுக் கொண்டுள்ளதாக குறித்த அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த பாரிய சதித்திட்டமானது 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மீன்பிடி கப்பல்களைப் பயன்படுத்தி பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு கண்டறிந்துள்ளது.

தடை செய்யப்பட்ட புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என அறியப்படும் இருவருக்கும் இந்த சதித் திட்டத்தில் தொடர்பு உள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு கூறுகின்றது.

கடந்த மாதம் அங்கமாலியில் இருந்து கியூ பிரிவால் கைது செய்யப்பட்ட குறித்த இருவரில் ஒருவர் கடந்த பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக இந்தியாவில் வீசா அல்லது கடவுச்சீட்டு இல்லாமல் தங்கியிருந்ததாகவும் புலனாய்வு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அவர் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தொலைபேசி இணைப்பு, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டையையும் பெற்றுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவிக்கின்றது.