May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”வரி விலக்கு போதாது”; பால் மா விலையை 260 ரூபாவினால் அதிகரிக்குமாறு இறக்குமதியாளர்கள் கோரிக்கை

இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் பால் மாவின் விலையை அதிகரிக்கும்படி வலியுறுத்தியுள்ளனர்.

சுங்க வரி மற்றும் துறைமுகம் மற்றும் விமான நிலைய வரிகளை தள்ளுபடி செய்வதன் மூலம் சந்தையில் பால்மாவின் விலையை அதிகரிக்காது பேணுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகளை வரவேற்பதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும், வரி விலக்கு காரணமாக பால் மாவின் விலையை  கிலோ ஒன்றுக்கு 35 ரூபா மட்டுமே குறைக்க முடியும் எனவும் இது உலக சந்தையின் விலை அதிகரிப்பிற்கு ஈடு கொடுக்க போதுமானதாக இல்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் படி, பால் மா கிலோ ஒன்றுக்கு 260 ரூபா விலை அதிகரிப்பை கோரியுள்ளனர்.முன்னதாக, அவர்கள் கிலோ ஒன்றுக்கு 350 ரூபா விலை உயர்வை கோரியிருந்தனர்.

முன்னதாக, பால் மாவின் விலை ஒரு டன்னுக்கு 4,300 அமெரிக்க டொலராக இருந்தது. அது இப்போது 3,800 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.

உள்ளூர் சந்தையில் தற்போதைய சில்லறை விலைகள் நிலவுமானால் குறைந்தபட்சம் ஒரு டன்னுக்கு 2,900 அமெரிக்க டொலர் வரை வீழ்ச்சியடையும் வரை தம்மால் இலாபம் ஈட்ட முடியாதுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு கிலோ பால் மா தயாரிக்க எட்டு லீட்டர் பால் தேவைப்படுவதாக மில்கோ தனியார் பால் மா நிறுவனத்தின் தலைவரான லசந்த விக்கிரமசிங்க டெய்லி மிரரிடம் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையை வழங்க வேண்டுமானால் பால் மா அத்தியாவசியமான உணவுப் பொருள் பட்டியலிலிருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அத்தோடு, மக்கள் பால் மாவுக்கு பதிலாக பாலை பயன்படுத்த பழக்கப்பட வேண்டும் எனவும் மில்கோ தனியார் பால் மா நிறுவனத்தின் தலைவரான லசந்த விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.