May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

300 கிலோ ஹெரோயின், துப்பாக்கிகளுடன் இலங்கையர்கள் 6 பேர் இந்திய கடற்பரப்பில் கைது

இந்திய கடற்பரப்பில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் படகு ஒன்று தடுத்து வைக்கப்பட்டதை அடுத்து ஆறு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கடலோர காவல்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் மினிகோய் தீவுக்கு அருகில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட படகில் 300 கிலோகிராம் ஹெரோயினுக்கு மேலதிகமாக ரஷ்ய உற்பத்தியான ஐந்து AK 47 ரக துப்பாக்கிகளும், அதற்கு பயன்படும் 1000 துப்பாக்கி ரவைகளும் 9 மி.மீ வெடிமருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன.

இலங்கை மீன்பிடிக் கப்பலான ‘ரவிஹான்சி’ மார்ச் 25 அன்று கேரளாவின் விஜின்ஜாம் கடற்கரையில் இந்திய கடலோர காவல்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு,இந்திய கடலோர காவல்படையினர்  தமது கட்டுப்பாட்டுக்குள் படகை கொண்டுவந்திருந்தனர்.

 

 

இதையடுத்து படகின் நீர் தொட்டியின் உள்ளே பறக்கும் குதிரையின் உருவமொன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 301 ஹெரோயின் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஈரானின் சபாஹர் துறைமுகத்தில் இருந்து வந்த படகு ஒன்று லட்சத்தீவு கடற்பரப்பில் இலங்கை மீன்பிடி படகிடம் சரக்குகளை வழங்கியுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இங்கிருந்து இலங்கைக்கு சரக்குகளை கடத்தி வந்தபோதே குறித்த படகு இந்திய அதிகாரிகளினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் எல்.ஒய் நந்தன, எச்.கே.ஜி.பி தாஸ்பிரிய, ஏ.எச்.எஸ் குணசேகர, எஸ்.ஏ.செனரத், டி ரணசிங்க மற்றும் டி நிசங்க என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பிற்கு இந்த கடத்தலுடன் தொடர்பிருக்கலாம் என இந்திய கடலோர காவல்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.