January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொத்துவில்-பொலிகண்டி பேரணி; சாணக்கியன் உட்பட 7 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், த. கலையரசன் உள்ளிட்ட எழுபேருக்கு எதிராக  கல்முனை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரிக்க, மேன்முறையீட்டு நீதிமன்றம், இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் மக்கள் எழுச்சி பேரணியாக இடம்பெற்ற பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில்,  நீதிமன்ற தடை உத்தரவை மீறி கலந்துகொண்டதாக குற்றம்சாட்டி, குறித்த 7 பேருக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் கல்முனை பொலிஸார் பெப்ரவரி 5 ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, பிரதிவாதிகளாக பெயரிடப்பட்ட எம்.பி க்களான இரா. சாணக்கியன், கோ. கருணாகரம், த. கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேந்திரன், சீ. யோகேஸ்வரன், மாணவர் மீட்பு பேரவையின் தலைவர் செ. கணேசானந்தன் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் துணைச் செயலாளர் அ. நிதான்சன் ஆகியோருக்கு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கல்முனை நீதவான் அழைப்பாணை பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில், கல்முனை நீதவான் நீதிமன்ற நடவடிக்கைக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றில் பிரதிவாதிகளினால் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர்  ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.