May 16, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை: ‘போராட்டத்தை வலுவடையச் செய்த பெருமை தமிழ்த் தேசியக் கட்சிகளையே சாரும்’

வடக்கு-கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரெழுச்சிப் போராட்டம் தமிழர் வரலாற்றில் மீண்டும் ஒரு மைல்கல் வெற்றியை உருவாக்கியுள்ளதாக தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவை தெரிவித்துள்ளது.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

வடகிழக்கு சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில்  சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் தன்னெழுச்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் பங்கெடுத்தார்கள் என்பது ஒரு மாபெரும் வரலாற்று வெற்றி எனவும் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு இந்தப் போராட்டத்தில் வடக்கு- கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் பூரண ஒத்துழைப்பும் களச்செயற்பாடுகளும் அவர்கள் தமிழ்த் தேசியத்தின் மீது கொண்ட பற்றுறுதியும் பாராட்டத்தக்கது எனவும் தெரிவித்துள்ளது.

அதேபோல் வடக்கு கிழக்கில் உள்ள சமூகமட்ட செயற்பாட்டு அமைப்புக்கள், தமிழ்த் தேசியத்திற்கான சிவில் அமைப்புக்களினதும் ஆதரவும் ஒத்துழைப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது.

மேலும் இந்தப் போராட்டத்தில் சிங்கள பேரினவதிகளால் ஏற்படுத்தப்பட்ட அனைத்து தடைகளையும் முன்னின்று தகர்த்து மேலும் வலுவடையச் செய்த பெருமை தமிழ்த் தேசியத்தின் மீது விசுவாசமாக செயற்படும் அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளையே சாரும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தப் போராட்டமானது இன்று தாயகம் தாண்டி சர்வதேசம் வரை சென்றிருக்கின்றது என்றால் வடகிழக்கில் வாழும் எம் அனைத்து இளைஞர்கள்,யுவதிகள் மற்றும் பொது மக்களையே சாரும்.

போராட்டத்திற்கு ஆதரவாக சர்வதேசத்தில் இருந்து எமக்கான ஒத்துழைப்புக்களையும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் வாகன பேரணிகளையும், போராட்டங்களையும் ஏற்பாடு செய்து நடாத்திய புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பங்கும் பாராட்டத்தக்கது எனவும் தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவை தெரிவித்துள்ளது.