நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன (CPC) தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அத்தோடு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதற்கான காரணம் எரிபொருள் விலை உயர்வு குறித்து சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் என கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஏனை நாட்களை விட அதிகமாக வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பப்படுவதால், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இருப்பு முடிவடைந்துள்ளதாக சிபிசி தொழிற்சங்க தலைவர் பந்துல சமான் குமார தெரிவித்தார்.
அத்தோடு,உடனடியாக எரிபொருளை சுத்திகரிக்க முடியாதமையால் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் கோரிக்கைக்கு அமைய மேலதிகமாக எரிபொருளை விநியோகிக்கும் திறன் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
உண்மையில், நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை. இது சில தேவையற்ற பயத்தின் காரணமாக ஏற்படுவதாக அவர் மேலும் கூறினார்.
பொருட்களின் விலை உயர்வை போன்று எரிபொருள் விலை உயர்வுக்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகள் பரவியதையடுத்தே இந்த நிலைமை தோன்றியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் எரிபொருள் பயன்பாடு அதிகரித்தால், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அந்த தேவையை பூர்த்தி செய்ய மற்றொரு நிரப்பு நிலையத்தை திறக்கும். ஆனால் இதுவரை, அத்தகைய தேவை ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.