May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிபொருள் கொள்வனவிற்காக ஓமனிடம் கடன் பெறுவதற்கு இலங்கை பேச்சுவார்தை!

எரிபொருள் கொள்வனவிற்காக 3.6 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைப் பெறுவது தொடர்பில் ஓமன் அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் போச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு நாடுகளும் இந்த திட்டத்தை தொடர கொள்கை ரீதியாக ஒப்புக்கொண்டதாகவும் இந்த ஒப்பந்தம் இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டார தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கொழும்பின் வாராந்த ஆங்கில பத்திரிகையொன்று இது தொடர்பான செய்திகளை வெளியிட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தத்தின் படி, இலங்கை அரசாங்கத்திற்கு ஐந்து வருட சலுகைக் காலத்தையும் 20 வருடங்கள் திருப்பிச் செலுத்தும் காலத்தையும் ஓமன் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.6 பில்லியன் டொலர்கள் 12 மாத காலத்திற்கு எரிபொருளை கொள்வனவு செய்ய போதுமானதாக இருக்கும் அதிகாரியொருவர் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை, மாதாந்தம் எரி பொருளுக்காக  சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்துகிறது.

இந்நிலையில் ஓமான் ஒப்பந்தம் முடிவடைந்தவுடன் ஏனைய நாடுகளிடம் எரிபொருள் கொள்வனவுக்கு கடன் பெற வேண்டிய அவசியமில்லை எனவும் கூறப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இருப்பினும், எதிர்காலத்தில் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்பு ஏற்பட்டால், அதனை சமாளிக்கும் வகையில் , இந்தியாவுடன் 500 மில்லியன் டொலர்கள் கடன் பெறுவதற்கான பேச்சுவார்த்தை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனினும் இவ்வாறாக வெளியாகியுள்ள தகவல்களை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மறுத்துள்ளதாகவும்,  தற்போது நாட்டில எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என அவர் கூறியதாகவும் குறித்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.