இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கும் ஒரு தீவாக உலக மக்களால் வியந்து பார்க்கப்படும் இலங்கையின் வளங்கள் இன்று ஒருசில மனிதர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது.
அண்மைக்காலமாக இலங்கையின் செழிப்பு மிகுந்த காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக பல சர்ச்சைகள் எழுந்து வந்ததுடன், அது தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு முன்னதாகவே மற்றுமொரு இயற்கையின் அழிவை இலங்கையர்கள் சந்தித்திருக்கிறார்கள்.
உலக நாடுகளால் வியந்து பார்க்கப்பட்ட இலங்கையின் கடற்பரப்பு ஒரு கப்பலால் சீர் குலைந்து போயுள்ளது.
‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ கப்பல் ஏற்படுத்தியிருந்த தீ விபத்துக்கு பின்னர் இந்த அழிவை இலங்கை கடல் வளம் சந்தித்திருக்கிறது.
குறித்த விபத்து இடம்பெற்று ஒரு மாதத்துக்கு மேல் கடந்துள்ள போதிலும், விபத்தின் காரணமாக கடல் வளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அழிவுகள் தொடர்பான சரியான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.
கப்பலில் இருந்து கடலில் விழுந்து கரையொதுங்கிய கழிவுகளில் இதுவரையில் 1000 டொன்களுக்கும் அதிகமானவை சேகரிக்கப்பட்டு விட்டது.
கடற்கரை சூழலை சுத்தம் செய்யும் பணிகள் சர்வதேச உதவிகளுடன் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடல்வாழ் உயிரினங்கள் பல உயிரிழந்து கரை ஒதுங்கி வருகின்றன. ஜூன் 24 ஆம் திகதி வரை இவ்வாறு உயிரிழந்த 100 க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் மற்றும் 46 க்கும் அதிகமான கடல் பாலூட்டிகளின் (திமிங்கலங்கள், டால்பின்கள் மற்றும் போர்போயிஸ்) உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்து கரை ஒதுங்கும் உயிரினங்களை விடவும் 10 மடங்கானவை கடலில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடல் உணவுகளை உட்கொள்வதில் ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாக விபத்து இடம்பெற்ற கடல் சூழலில் மீனவர்களுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ் – ப்ரஸ் பேர்ல் கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைவதற்கு முன்னரே சிக்கலை சந்தித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின், ஜுஷான் சாங்ஹோங் இன்டர்நேஷனல் ஷிப்யார்ட் கோ லிமிடெட் நிறுவனத்தினால் கட்டப்பட்ட எக்ஸ் – ப்ரஸ் பேர்ல் கப்பல் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட சூப்பர் ஈகோ 2700-வகுப்பு கொள்கலன் கப்பலாகும்.
610 அடி (186 மீட்டர்) நீளமுடைய இந்த கொள்கலன் கப்பல் 37,000டொன் எடையுடையது. இதில் இருபது அடி சமமான அலகுகளைக் கொண்ட 2,743 கொள்கலன்களை ஏற்றி செல்ல முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
மலேசியாவின் போர்ட் கிளாங் துறைமுகத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த எக்ஸ் – ப்ரஸ் பேர்ல் கப்பல் சிங்கப்பூர் வழியாக துபாய் -ஜெபல் அலி துறைமுகத்தை அடைந்து கத்தார் – ஹமாத் துறைமுகம் வரை பயணத்தை மேற்கொண்டது.
அதற்கமைய மலேசியா திரும்பும் பயணம் இந்தியா -ஹசிரா துறைமுகத்திலிருந்து இலங்கை – கொழும்பு துறைமுகம் வழியாக இருந்தது.
https://www.marinetraffic.com/en/ais/home/centerx:79.8/centery:7.1/zoom:10
(marinetrafficஎக்ஸ் – பிரஸ் பேர்ல் கப்பலின் பயணப்பாதை)
மே 15 அன்று இந்தியாவின் ஹசிரா துறைமுகத்தில் இருந்து 1,486 கொள்கலன்களுடனும் மொத்தம் 325 மெட்ரிக் டன் எரிபொருளுடனும் இந்த பயணம் தன்னுடைய இறுதிப்பயணம் என்று தெரியாமல் ,பயணத்தை ஆரம்பித்தது எக்ஸ் – ப்ரஸ் பேர்ல் கப்பல்.
தேசிய நீரியல் வள ஆய்வு நிறுவனம் மற்றும் சமுத்திர பாதுகாப்பு நிறுவனத்தின் உத்தியோகபூர்வ தகவல்களின் படி, மே 20, 2021 அன்று, இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்கு 9.5 கிலோ மீற்றர் தூரத்தில் நங்கூரமிட்டபோது கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.
இதன் போது கப்பலில் 25 டன் நைட்ரிக் அமிலம், யூரியா உரம், கந்தக அமிலம், எத்தனால், சோடியம் ஹைட்ரொக்சைட் உள்ளிட்ட பல அபாயகரமான இரசாயனங்கள் அடங்கிய 81 கொள்கலன்களுடன் மசகு எண்ணெய் மற்றும் 78 மெட்ரிக் டன் நர்டில்ஸ் எனப்படும் பிளாஸ்டிக்குகளும் இருந்துள்ளன.
கப்பல் தீ பற்றி எரிய ஆரம்பித்த போது கப்பலுக்குள் சிக்கியிருந்த 25 பேர் இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
4 நாட்களாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் கடற்படையினரும், சமூத்திரவியல் பாதுகாப்பு பிரிவினரும் தமது முயற்சியை முன்னெடுத்தனர்.
நீர் பாய்ச்சியும் தீ அணைக்கும் இரசாயனங்களை விசிறியும் தீயை கட்டுக்குள் கொண்டுவர இலங்கையின் கடற்படையும் விமானப் படையும் முயன்றன.
எனினும் கப்பலில் இரசாயன வெடிப்பு ஏற்பட்டதாகவும், நைட்ரஜன் அமிலம் மற்றும் மோசமான வானிலை காரணமாக தீ பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியாது போனதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக இலங்கை இந்தியாவின் உதவிகளை நாடியது. அதற்கமைய இந்தியா தீயணைப்பு படகு உட்பட பல்வேறு உபகரணங்களையும் அனுப்பி வைத்தது.
எனினும் அந்த முயற்சி பலனளித்திருக்கவில்லை. அதற்குள் கப்பலில் இருந்து இரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் அடங்கிய 8 கொள்கலன்கள் கடலுக்குள் வீழ்ந்து விட்டதாக சமுத்திரவியல் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்திருந்தது.
இலங்கை – இந்திய கடற்படையினரின் கூட்டு முயற்சியால் சுமார் 7 நாட்களின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும் கப்பலில் இருந்த கொள்கலன் பகுதி முழுவதும் எரிந்து முடிந்திருந்தது.
கப்பலில் உள்ள இரசாயனங்கள் மேலும் கடலில் கலப்பதையும், கப்பலில் உள்ள எண்ணெய் கடலில் கலப்பதையும் தவிர்ப்பதற்காக, கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கும்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்தார். ஆனால் கப்பல் மூழ்க தொடங்கியதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
இந்த பேரழிவு தற்செயலாக நிகழ்ந்ததாக கூறப்பட்ட போதும், கப்பலின் கொள்கலன்களில் உள்ள இரசாயனப் பொருட்களின் கசிவை இலங்கைக்கு 1000 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள அரேபிய கடலில் அடையாளம் காணப்பட்டிருந்ததாக எக்ஸ்- பிரஸ் பேர்ல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிம் ஹார்ட்னோல் “ஸ்ப்லஸ்.297” செய்திச் சேவைக்கு தெரிவித்திருந்தார்.
கப்பலில் இருந்த இரசாயன பொருட்கள் உரிய முறையில் களஞ்சியப்படுத்தப்படாததனால், ஏற்பட்ட இரசாயனப் பொருட்களின் கசிவு காரணமாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
‘இவ் விடயத்தை அறிந்து கொண்ட கப்பலின் தளபதி, இந்தியாவின் ஹஸீரா மற்றும் கட்டாரின் ஹம்மாட் துறைமுகங்களுக்கு வர அனுமதி கோரியதாகவும் இரண்டு நாட்டு துறைமுகங்களிலும் அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாகவே, அருகில் உள்ள இலங்கையின் கொழும்பு துறைமுகத்துக்கு வர தீர்மானித்துள்ளார்’ என்றும் கப்பலின் உரிமையாளர் தெரிவித்திருந்தார்.
இந்தியா அல்லது கட்டார் துறைமுகங்கள் இந்த பொருட்களை இறக்குவதற்கு அனுமதி வழங்கியிருந்தால், இவ்வாறான அனர்த்தம் ஏற்பட்டு இருக்காது என்றும் டிம் ஹார்ட்னோல் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், கப்பல் 20 ஆம் திகதி நள்ளிரவு இலங்கை கடற்பரப்பிற்குள் வந்துள்ள நிலையில், அதற்கு 12 மணி நேரத்திற்கு பின்னரே தீ விபத்து ஏற்பட்டதாக மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்திருந்தார்.
எது எவ்வாறாயினும், கப்பல் விபத்தினால் ஏற்பட்டுள்ள கடல் சார் சூழல் மாசு ஈடுசெய்ய முடியாததாகும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
கப்பல் எரிய ஆரம்பித்த நொடியிலிருந்து கப்பலில் இருந்த பல இரசாயனங்களும் டொன் கணக்கில் நர்டில்ஸ் எனப்படும் மைக்ரோ பிளாஸ்டிக் வகைகளும் கடலில் கலந்தன. இலங்கை இப்படி ஒரு கடற் சார் பேரழிவை சந்தித்தது இதுவே முதல் முறை.
இந்த பேரழிவின் தாக்கம் கடலிலும் தரையிலும், பல வடிவங்களில் பதிவாகி வருகின்றன.
பிளாஸ்டிக் மாசுபாடு மற்றும் எண்ணெய் கசிவு என்பவற்றால் ஏற்படப் போகும் மாசுபாடு என கடல் உயிரினங்களுக்கும் மனிதர் உள்ளிட்ட தரைவாழ் உயிரினங்களுக்கும் கடல் சார் சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிளாஸ்டிக் மாசுபாடு
எக்ஸ் – ப்ரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கடலில் கலந்த கழிவுகளில் கண்ணுக்கு தெரியும் அளவில பாரிய சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தியுள்ள ஒன்றுதான் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் வகையை சேர்ந்த பிளாஸ்டிக் நர்டில்ஸ் எனப்படும் சிறிய உருண்டைகள்.
உயர் மற்றும் குறைந்த அடர்த்திகளை உடைய இந்த பிளாஸ்டிக் நர்டில்ஸ்கள் கப்பலில் 78 மெட்ரிக் டன் (170,000 பவுண்டுகள்) இருந்துள்ளன. 4 ,2 பிளாஸ்டிக் வகையை சேர்ந்த இவற்றின் ஆயுள்காலம் 100 முதல் 500 ஆண்டுகள் வரை இருக்கலாம்.
இவை இருந்த கொள்கலன்கள் பல எரிந்து கடலில் விழுந்ததையடுத்து அவை கடல் அலைகளினால் அடித்து வரப்பட்டு திக்கோவிட்ட முதல் சிலாபம் வரையான கடற்கரைப் பகுதிகளில் ஒதுங்கியுள்ளன.
இவற்றை அகற்றும் பணியில் பிளாஸ்டிக் நர்டில்ஸ் 44 கொள்கலன்கள் உட்பட, பல அபாயகரமான கழிவுப் பொருட்கள் அடங்கலாக 1,000 டொன் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் வருடம் ஒன்றுக்கு 1.15 முதல் 2.41 மில்லியன் மெட்ரிக் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சேர்க்கப்படுகிறது.
இதில் இலங்கை கடற்பரப்பில் கலந்திருப்பது ஒரு சிறிய பகுதி என்றாலும் அதன் செறிவு ஒரு இடத்தில் குவிந்துள்ளமை பாரிய தாக்கங்களை ஏற்படுத்த கூடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையர்கள் ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் 3 கிலோகிராம் பிளாஸ்டிக் கழிவுகளை வெளியிடுவதாக ஆய்வு ஒன்று மதிப்பிட்டுள்ளது.
தற்போது கப்பல் விபத்தின் மூலம் கடலில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் கிட்டத்தட்ட ஒரே நாளில் 26,000 இலங்கையர்கள் வருடந்தில் வெளியேற்றும் கழிவுக்கு சமமானதாகும்.
இந்த பிளாஸ்டிக் நர்டில்ஸ்களில் ஒரு பகுதி கப்பலின் தீயுடன் எரிந்து பௌதீக மற்றும் வேதியியல் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளன. மற்றொரு பகுதி புற ஊதா ஒளியின் கீழ் சிதைவடையலாம்.
அத்தோடு இந்த பிளாஸ்டிக் சூழலில் உள்ள பல்வேறு நச்சுகளையும் உறிஞ்சக் கூடியவை.
இவ்வாறு சிதைவடையும் இந்த பிளாஸ்டிக் துகள்கள் கடலில் உள்ள உற்பத்தியாக்கிகளான ஆல்காக்கள் அல்லது பாசிகளில் படிகின்றன. இவற்றை உட்கொள்ளும் சிறிய மீன்களின் உடலுக்குள் இவை இலகுவாக சென்றடைகின்றன.
பெரும்பாலான மீன்களால் இவை உட்கொள்ளப்பட்டால் குடல் வழியாக வெளியேற்றப்படலாம். எனினும் சில மீன்கள்அல்லது மட்டி முழுவதுமாக உண்ணப்படும் போது சிக்கல்கள் தோன்ற வாய்ப்புள்ளது.
“இந்த பிளாஸ்டிக் நர்டில்ஸ்கள் நாம் உண்ணும் மீன்களுக்குள் இருந்தால், அவை வழக்கமாக மீனின் செரிமான மண்டலத்தில் இருக்கும்” என்று அவுஸ்திரேலியாவின் சி.எஸ்.ஐ.ஆர்.ஓ பெருங்கடல்கள் மற்றும் வளிமண்டலத்தின் பிரிட்டா டெனிஸ் ஹார்டஸ்டி பி.பி.சி.யிடம் தெரிவித்துள்ளார்.
“ஆனால் நாங்கள் முழு மீன்களில் இந்த பகுதிகளை அகற்றி விடுவதால் இந்த பாதிப்பு குறைக்கப்படுகின்றது.
அத்தோடு பிளாஸ்டிக்குகளை உண்ணும் மீன்களை மனிதர்கள் உண்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
எனினும் சுற்றுச் சூழலில் மெதுவாக உடைந்து சிறு மீன்களுக்கு உணவாகும் நஞ்சுகள் உணவு சங்கிலி ஊடாக குவிந்து நச்சுத்தன்மையை அதிகரிக்கின்றன. இது மனிதர்களிலும் பிற உயிரினங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
பிளாஸ்டிக் குப்பைகளை சுத்தம் செய்ய நேரமும் வளமும் தேவைப்படும்.தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளின் வெற்றி, பிளாஸ்டிக் நுணுக்கங்களை எவ்வளவு விரைவாக கொண்டு சேகரிக்க முடியும் என்பதைப் பொறுத்தது.
சுற்றுச் சூழலில் இருந்து ஒவ்வொரு துகள்களையும் அகற்றுவது இயலாது எனினும் அதிகமான பகுதி சுத்தம் செய்யப்பட வேண்டும்.
கண்களுக்கு தெரியும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டாலும் அது கப்பலில் இருந்து வெளியிடப்பட்டதில் 50 வீதமானதாகவே இருக்கும்.
நாம் ஓரிரு மாதங்களில் இந்த விபத்தை மறக்கலாம்.ஆனால் இதன் விளைவுகள் 500 ஆண்டுகளுக்கு மேலும் எம்மை தொடரலாம் என்பதை மறுக்கமுடியாது.
இதற்கு ஏற்கனவே கடலில் இடம்பெற்றுள்ள பல கப்பல் விபத்துக்கள் சான்று பகர்கின்றன.
பிளாஸ்டிக் உட்கொள்வதனால் கடல் வாழ் உயிரினங்களிடையே மிகவும் பொதுவான சுகாதார விளைவுகளாக இரைப்பை-குடலில் (ஜி.ஐ.டி) சிதைவு அல்லது புண், தொற்று மற்றும் உள் இரத்தப்போக்கு என்பன ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
செரிமான மண்டலத்தின் (டி.டி) நேரடி அடைப்பு, ஊட்டச்சத்து அதிகரிப்பை குறைத்தல் அல்லது தடுப்பது, இனப்பெருக்கம் தடைப்படல் ஆகியனவும் இதில் அடங்கும்.
திமிங்கலங்கள், டொல்பின்கள் மற்றும் போர்போயிஸ்கள் உள்ளிட்ட பாலூட்டிகளை இவை அதிகமாக பாதிக்கும்.
கடல் உயிரினங்கள் மைக்ரோ பிளாஸ்டிக்கை உட்கொள்வது பெரும்பாலும் மரணத்திற்கு ஒரு காரணியாக கருதப்படுகின்றது.
அத்தோடு பிளாஸ்டிக் பைகள் இரைப்பை குடலில் அடைப்பை ஏற்படுத்துவதால் கடல் பாலூட்டிகளின் மரணங்கள் உலகெங்கும் பதிவாகியுள்ளன.
கடலில் கலக்கும் பிளாஸ்டிக் குப்பைகளினால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கடற் பறவைகளும் 100,000 க்கும் மேற்பட்ட கடல் பாலூட்டிகளும் உயிரிழப்பதாக யுனெஸ்கோ தெரிவிக்கின்றது.
இரசாயன மாசுபாடு
“அந்தக் கப்பலில் சுமார் 46 வெவ்வேறு இரசாயனங்கள் இருந்தன” என்று இலங்கையின் சுற்றுச்சூழல் ஆர்வலரும் கொழும்பில் உள்ள சுற்றுச்சூழல் நீதி மையத்தின் நிறுவனருமான ஹேமந்த விதானகே பி.பி.சி.யிடம் தெரிவித்துள்ளார்.
கப்பலில் இருந்து வெளியேறிய, இரசாயன மாசுபாடுகள் பல தசாப்தங்களுக்கு நாட்டை பாதிக்கக்கூடியவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கப்பலில் உள்ள மிகவும் ஆபத்தான கூறுகளில் நைட்ரிக் அமிலம், சோடியம் டை ஒக்சைட் ,தாமிரம் மற்றும் ஈயம் ஆகியவையும் உள்ளன என்று கூறியுள்ள அவர், தண்ணீரில் கலக்கும் இந்த இரசாயனங்கள் உள்ளூர் கடல் வாழ் உயிரினங்களின் வயிற்றில் சேரும்.
நச்சுத் தன்மையின் விளைவாக சிறிய மீன்கள் விரைவாக இறக்கக்கூடும்.ஆனால் பெரிய மீன்கள் குறைவாக இருக்கும். எனினும் பெரிய மீன்கள் சிறிய மீன்களை உண்பதன் மூலம், காலப்போக்கில் நச்சுகள் மெதுவாக அவற்றின் உடலில் உருவாகும்.
தற்போது உயிரிழந்துள்ள நிலையில் கரை ஒதுங்கியுள்ள மீன், ஆமைகள் மற்றும் டொல்பின்களில் சில பச்சை நிறமாக மாறியுள்ளமை, உலோகங்கள் மற்றும் இரசாயனங்கள் மாசுபாட்டினால் ஏற்பட்டுள்ள பாதிப்பை குறிக்கிறது என அவர் பி.பி.சி.யிடம் கூறியுள்ளார்.
“எனவே சில ஆண்டுகளின் பின்னரும் இலங்கை கடற்பரப்பில் பிடிக்கப்படும் மீன்களில் இரசாயனங்களின் செறிவு அதிகரித்து (bioaccumulation)காணப்படும். அது மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கும்.”
இதனால் இப்பகுதியில் இருந்து பிடிக்கப்படும் மீன்கள் மனிதர்களுக்கு ஆபத்தானதாக இருக்கும்.இப்போதைக்கு மட்டுமல்ல, பல ஆண்டுகளுக்கு அதன் தாக்கம் இருக்கலாம்.
“இப்போது தீ பற்றிய கப்பல் முற்றிலும் நச்சுப் பொருளாக மாறியுள்ளது. கரைக்கு வரும் எந்தவொரு பொருளும் மிகவும் விஷம் உடையது. இவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று ஹேமந்த விதானகே பி.பி.சியிடம் வலியுறுத்தியுள்ளார்.
மனித செயற்பாட்டால் கடலில் சேரும் இரசாயனங்கள் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
உதாரணமாக பல ஆண்டுகளாக, விவசாயத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் இரசாயன கழிவுகளான பொஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் கழிவுகள் கடலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
தண்ணீரில் இந்த இரசாயனங்கள் அதிகமாக (யூட்ரோபிகேசன்) நைட்ரஜனை தூண்டுகின்றன.இது அல்ககோளின் அதிகப்படியான வளர்ச்சியை தூண்டி பேரழிவை ஏற்படுத்துகிறது.
அதிகப்படியான ஆல்கா பாசிப் பூக்களை உருவாக்குகிறது, இது “பழுப்பு அலைகள்” அல்லது “சிவப்பு அலைகள்” எனப்படும் நச்சுகளை பரப்புகிறது.
சிவப்பு அலைகள் மற்றும் பழுப்பு அலைகள் இரண்டும் மீன், கடல் பாலூட்டிகள் மற்றும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
இந்த தீங்கு விளைவிக்கும் பூக்கள் இறக்கும் போது, பக்டீரியா அனைத்து ஒக்ஸிஜனையும் உட்கொண்டு ஒரு இறந்த மண்டலத்தை உருவாக்குகிறது மற்றும் மீன்கள் இந்த பகுதியில் வாழ முடியாத சூழல் ஏற்படும்.
கப்பலில் எண்ணெய்க் கசிவும் கடல் நீர் மாசும்
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் விபத்துக்குள்ளான போது 378 டொன் எண்ணெய் கப்பலில் இருந்துள்ளது.
தீ பற்றி எரிந்த கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளமை ஜூன் 7 ம் திகதி செய்மதி மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தெளிவாக காண்பிக்கப்பட்டுள்ளது.
(எக்ஸ் – ப்ரஸ் பேர்ல் கப்பலின் எண்ணெய் கசிவை காட்டும் செய்மதி புகைப்படங்கள்)
கடலில் கலக்கும் எண்ணெய் காரணமாக திமிங்கலங்கள், டொல்பின்கள் மற்றும் பின்லெஸ் போய்போய்ஸ் மீன் இனங்களின் ஆரோக்கியம் பாதிப்புக்கு உள்ளாகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன .
எண்ணெயின் நச்சு தன்மை காரணமாக சில டொல்பின் மற்றும் திமிங்கலங்களின் எண்ணிக்கை பாதியாக குறைவடையும் சந்தர்ப்பங்களும் அதிகமாக உள்ளன. மேலும் இவை இயற்கையாக மீண்டும் அந்த எண்ணிக்கையை அடைய இன்னும் 50 வருடங்கள் ஆகலாம்.
இலங்கை கடற்பரப்பில் வாழும் பல உயிரினங்கள் மிகவும் ஆழமற்ற நீரிலிருந்து பரந்த கடற் பரப்பு வரையில் வாழ்விடங்களாக பயன்படுத்துகின்றன.
எண்ணெய் கசிவுகள் மற்றும் பிளாஸ்டிக் துகள்கள் நிறைந்துள்ள பகுதிகளில் கடல் வாழ் உயிரினங்களின் உணவு மற்றும் இனப் பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு உடலியல் செயல் முறைகள் பாதிக்கப்படும்.
பக்டீரியாவின் செயற்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் கடலில் மிதக்கும் எண்ணெய் படையை உடைக்க முடியும் எனினும் சில சந்தர்ப்பங்களில் எண்ணெய் மாசுபாடு பல ஆண்டுகளுக்கு கடற்பரப்பில் நீடிக்கக்கூடும்.
இலங்கை கடற் பரப்பில் வாழும் உயிரினங்களுக்கு அதிகரித்துள்ள அச்சுறுத்தல்!
இலங்கை தீவின் அழகுக்கு அதன் எழில் கொஞ்சும் கடற்கரை அழகு ஒரு முக்கிய காரணம். அத்தோடு பசுமையான கடலில் வாழும் நீர் வாழ் உயிரினங்கள் உலக நாடுகளின் சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு ஈர்க்கும் மற்றொறு காரணம்.
கப்பல் விபத்துக்குப் பின்னர் இதுவரை இலங்கை கடற்பரப்பில் உயிரினங்களின் இறப்புக்கு நஞ்சுப் பொருட்களே காரணம் என கடல்சார் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆமைகளின் பயணப்பாதைஇலங்கை கடற்பரப்பில் 5 ஆமை இனங்கள் உள்ள நிலையில், அதில் 3 இனங்கள் அதிகமாக உயிரிழந்துள்ளன.
கப்பல் விபத்து இடம்பெற்ற பகுதி பெரும்பாலும் இவற்றின் பயணப்பாதையில் உள்ளமையே இவை அதிகமாக மரணிப்பதற்கு காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த காலப்பகுதியில் ஆமைகள் முட்டைகளை இடுவதற்காக தரையை நோக்கி வருகின்றமை மற்றொரு காரணம்.
அத்தோடு ஆழம் கூடிய கடலில் வாழும் டொல்பின்களும் இறந்துள்ளன. இவற்றின் இறப்பு கப்பலில் இருந்து வெளியேறிய இரசாயன கழிவுகள் கடலின் மிக அதிகமான கடற்பரப்பில் கலந்துள்ளதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
இலங்கை கடலில் ஏற்கனவே அதிகப்படியான மீன்பிடி நடவடிக்கை மற்றும் வாழ்விட சீரழிவு போன்றவற்றால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இந்த இனங்கள் தற்போது ஏற்பட்டுள்ள கப்பல் விபத்து காரணமாக கூடுதல் அச்சுறுத்தலை எதிர் கொண்டுள்ளன.
கடல் மாசடைதல் மனிதர்களை எவ்வாறு பாதிக்கும்!
இலங்கை மக்கள் தமது உணவு தேவைக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் கடலை நம்பியுள்ளனர்.
மனிதர்களுக்கு தேவையான புரத தேவை பெரும்பாலும் கடலில் இருந்து நிவர்த்தி செய்யப்படுகின்றது.அத்தோடு கடல் வாழ் உயிரினங்களிடமிருந்து பல அரிய மூலிகைகளும் தயாரிக்கப்படுகின்றன.
அதே நேரத்தில், மீன் சாப்பிடுவதால் கடல் பறவைகள் பாதிக்கப்படுகின்றன. கடலில் பாதிக்கப்பட்ட உயிரினங்களை உண்ணும் எந்த உயிரினமும் பாதகமான விளைவுகளை எதிர்கொள்கின்றன.
கடலில் சேரும் இரசாயனங்கள், பிளாஸ்டிக் மற்றும் கச்சா எண்ணெய்கள் உள்ளிட்ட சூழலை மாசுபடுத்தும் காரணிகள் உணவு வளையின் ஊடாக ஒரு விலங்கிலிருந்து மற்றைய விலங்குக்கு கடத்தப்படும் போது அதன் விஷம் அல்லது இரசாயனம் அடுத்தடுத்த சக்தி மட்டங்களில் குவிவடைகின்றது. அல்லது அதன் செறிவு அதிகரிக்கின்றது.
இது (bioaccumulation) பயோஅகுமுலேஷன் என அழைக்கப்படுகின்றது. இதன் காரணமாக இறுதி நுகர்வு மட்டத்தில் உள்ள மனிதர்களுக்கு அதிக செறிவில் இரசாயனங்கள் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இலங்கையை சூழ்ந்துள்ள இயற்கை பாதுகாப்பு அரணில் ஏற்படுத்தியுள்ள தாக்கம்
இலங்கையை சூழ உள்ள கடற்பரப்பு ஒரு பாதுகாப்பு அரணை உருவாக்கியுள்ளது. இதில் கடற் புற்தரையும் (சீக்ராஸ் ) பவளப்பாறைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இவை கடலரிப்பு , சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களிலிருந்து இலங்கைக்கு பாதுகாப்பு அளிக்கின்றது.
பவளப்பாறைகள் மற்றும் கடல் புல்வெளிகள் கடல் மாசுபாட்டால் பாதிக்கப்படுகின்றன.
பசுபிக் பெருங்கடலில் இலங்கையை சூழ உள்ள கடல் புற்தரை (சீக்ராஸ்) உயிர் பல்வகைமையின் ஒரு பகுதியாகும்.
இலங்கையை சூழ 15 கடல் புல் இனங்கள் உள்ளன.அவற்றில் ஒன்று ஆபத்தான பட்டியலில் உள்ளது.
இலங்கையில் நீருக்கடியில் உள்ள கடற் புல் வெளிகளின் மொத்த அளவு 371.37 சதுர கிலோமீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எக்ஸ்-பிரஸ் பேர்ல் பேரழிவு இடம்பெற்ற இடத்திலிருந்து நேரடியாக வடக்கே உள்ள பகுதிகளில் நாட்டின் 75% க்கும் அதிகமான கடற்புல் தரைகள் உள்ளன.
இந்தப் பகுதி நாட்டின் 50% க்கும் அதிகமான மீன் வள உற்பத்தியை கொண்டுள்ளது.
மனிதர்களுக்கும் பெரிய விலங்கு இனங்களுக்கும் புரதத்தை உற்பத்தி செய்யும் ஒரு முக்கியமான கடலோர சுற்றுச்சூழலில் அடிப்படையானது கடல் புற்கள்.
இவை கடல் ஆமைகள் மற்றும் டுகோங்ஸ் எனப்படும் பெரிய பாலூட்டிகளினால் பிரதானமாக உண்ணப்படுகின்றது.
கடல் புல்வெளிகள் தண்ணீரை வடிகட்டுகின்றன மற்றும் புயல் சேதத்திலிருந்து கடற்கரையோரங்களை பாதுகாக்கின்றன, பவளப்பாறைகள் மற்றும் சதுப்பு நிலங்களுடன் தொடர்பு கொள்கின்றன.
கடலோர பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத் துறை மற்றும் மீன் வளத்துக்கான முக்கிய சொத்துகளாக உள்ள பவளப்பாறைகளும் இரசாயனங்களினால் ஆபத்தை எதிர்கொண்டுள்ளன.
ஆழமற்ற பவளப்பாறைகள் மீது எண்ணெய் மற்றும் வேதியியல் கசிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் படிவதால் நேரடி சேதம் ஏற்படுவதுடன் அவற்றின் வளர்ச்சி மற்றும் சுவாசத்திற்கு தடைகளை ஏற்படுத்தும்.
அதேபோல் இவற்றை உண்ணும் கடல் உயிரினங்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மரணத்தை கூட ஏற்படுத்தும்.
பவளப் பாறைகளின் வளர்ச்சிக்கு சூரிய ஒளி கடலின் ஆழ்பகுதி வரை நன்கு ஊடுருவும் வகையிலான தெளிவான கடல் பரப்பு அவசியமானது.
கடல் நீரின் வெப்பநிலை 20 °C – 24 °C வரையும் ஈரப்பதம் 30 சத வீதத்தில் இருந்து 35 சத வீதம் வரையும் இருக்க வேண்டும்.
இந்த நிலையில் இலங்கையை கடல் சூழல் மாசடைந்துள்ளமையானது பவளப் பாறைகளின் வளர்ச்சியை பாதிக்கலாம்.
இதனால் ஏற்படும் சேதத்தில் இருந்து அவை மீட்கப்படாமல் போகலாம். இதன் மூலம் நாட்டை சூழ உள்ள பாதுகாப்பு அரண் சிதைவடையலாம்.
கடலில் மனிதனால் ஏற்படுத்தப்படும் இந்த பேரழிவுகள் ஈடு செய்ய முடியாதவை. இவற்றின் விளைவுகள் மனித இனத்தை பின்தொடர்ந்து கொண்டே இருக்கும்.
மனிதர்களின் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளால் இயற்கை வளங்கள் பேரழிவுகளை சந்தித்து கொண்டு வருகின்றன.
இதன் மூலமாக மனித இனத்தினதும் உலகினதும் வாழ்நாள் குறைந்து கொண்டு செல்கின்றது என்பதே கவலையான விடயமாகும்.