May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

10 ஆயிரம் மெற்றிக்தொன் யூரியா எவ்வாறு கொண்டு வரப்பட்டது?; மக்கள் விடுதலை முன்னணி கேள்வி

ஜனாதிபதியின் கட்டளையை மீறி பாரிய அளவிலான யூரியா உரம் எவ்வாறு கொண்டு வரப்பட்டது என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

இரசாயன உரம் முழுமையாக நிறுத்தப்படுமென ஜனாதிபதி பல்வேறு சந்தர்ப்பங்களில் மக்களுக்கு வாக்குறுதியளித்துள்ள போதிலும் கடந்த வாரம் கொழும்பு துறைமுகத்திற்கு 10 ஆயிரம் மெற்றிக்தொன் யூரியா கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நிதி அமைச்சராக பசில் ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்ட வேளையில் ஒரு சில உற்பத்திகளுக்காக மாத்திரம் இரசாயன உரம் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்ட வேளையில், ஜனாதிபதி செயலகம் உடனடியாக தலையிட்டு அதனை மறுத்ததுடன், ஜனாதிபதி ஆரம்பத்தில் எடுத்த தீர்மானம் தொடர்ந்தும் இருப்பதாக கூறியிருந்தனர்.

ஆனால் ஜூலை மாதம் 9 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு 10ஆயிரம் மெற்றிக்தொன் யூரியா கொண்டு வரப்பட்டுள்ளது. அப்படியென்றால் நிதி அமைச்சர் கூறியதற்கு அமைய யூரியா பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதா?

ஒரு சில உற்பத்திகளுக்கு யூரியா பயன்படுத்த அனுமதிக்கப்படுமா? ஜனாதிபதி எவ்வாறு இதற்கு அனுமதித்தார்? எவ்வாறு கொழும்பு துறைமுகத்திற்கு இந்த யூரியா உரம் கொண்டுவரப்பட்டது? எனவும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி இதற்கு பதில் தெரிவிக்கவில்லை என்றால், ஜனாதிபதி செயலகம் இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்த விடயம் பொய்யாகிவிடும். தமக்கு நெருக்கமான நிறுவனங்கள் மூலமாகவா இந்த உரம் கொண்டுவரப்பட்டுள்ளது என மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இரசாயன உரப் பயன்பாட்டில் ஜனாதிபதியின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை ஜனாதிபதியும், அரசாங்கமும் அறிவிக்க வேண்டும். அந்த பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளது என்றார்.