May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடற்கரை தூய்மைப்படுத்தும் அதிநவீன இயந்திரங்கள் இலங்கைக்கு நன்கொடை!

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தின் மூலம் இலங்கை கடற்பரப்பில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதற்காக கடற்கரை தூய்மைப்படுத்தும் அதிநவீன இயந்திரங்கள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

“பீச் டெக் ஹைட்ரோ ஸ்வீபி” எனப்படும் இந்த 8 கடற்கரை சுத்தம் செய்யும் இயந்திரங்களை சிங்கப்பூர் சார்ந்த உலகளாவிய இலாப நோக்கமற்ற நிறுவனம், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கு  வழங்கியுள்ளது.

இந்த நன்கொடையை வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே இராஜாங்க அமைச்சர் மோகன் பிரியதர்ஷன டி சில்வா மற்றும் கடல் சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர ஆகியோர் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இந்த நன்கொடை சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் முயற்சியின் பயனாக இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

கடற்கரை சுத்தம் செய்யும் இயந்திரங்கள் ஜெர்மனியில் உள்ள கோஸ்போஹெர் ஜெலன்டெஃபாஹெர்ஜியூக் ஏஜி எனும் நிறுவனத்தின் தயாரிப்பாகும்.

பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் பிற வகை கழிவுகளை இந்த இயந்திரம் திறமையாக சுத்தம் செய்யும் திறன் கொண்டுள்ளது.

அத்தோடு, கடற்கரை சுத்தம் செய்யும் போது அபாயகரமான பொருட்களை தொடுவதால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து இந்த இயந்திரம் பாதுகாப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை பயன்படுத்தி இலங்கையின் கடற்கரை பகுதியில் சேர்ந்துள்ள பிளாஸ்டிக்குகளை சுத்தம் செய்யும் பணியை விரைவுபடுத்த கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை எதிர்பார்த்துள்ளது.