January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி: மனோ மற்றும் ரவிகரன் பொலிஸாரிடம் வாக்குமூலம்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டமைக்காக தம்மிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மற்றும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை பொலிஸார் தன் வீட்டுக்கு வந்து வாக்குமூலம் பெற்றுச் சென்றதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், நேற்று தான் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கியதாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

மாங்குளம் பொலிஸார் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் பெற்றுக்கொண்ட ஏஆர் 154ஃ21 என்ற இலக்க தடையுத்தரவை தான் கடந்த 6 ஆம் திகதி மீறியதாகக் கூறியே, பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மக்களுக்காகவும், மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவுமே தான் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் பங்கேற்றதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு வழங்கிய வாக்குமூலத்தில் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

மேலும், பேரணிக்கு எதிரான நீதிமன்ற தடையுத்தரவுகளை மீறிய சம்பவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் உட்பட 7 பேருக்கு கல்முனை நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.