November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பேரணியில் சென்ற அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்ட  அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் பருத்தித்துறை நீதிமன்றில் மூன்று பொலிஸ் நிலையங்களினால்  ‘பி’ அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய ஏற்கனவே பேரணிக்கு தடைகோரி ‘ஏ’ அறிக்கையூடாக பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையங்களால் தொடரப்பட்ட வழக்கிற்கு நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தே, இந்த ‘பி’ அறிக்கைகள்  தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி நீதிமன்றக் கட்டளைச் சட்டம் 55 (1), 56 2 (ஆ) ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த ‘பி’ அறிக்கைகளை பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் தனித்தனியே தாக்கல் செய்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், சட்டத்தரணி கே.சுகாஷ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு எதிராக இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளன.