பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் இடம்பெற்ற பேரணியானது அரசாங்கத்தை சர்வதேச மட்டத்தில் நெருக்கடிக்குள் தள்ளும் முயற்சியென அமைச்சரவை இணை பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது நாட்டின் ஆட்சியை இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிட்டதாகவே மனித உரிமைகள் ஆணையாளர் உள்ளிட்ட மனித உரிமை பேரவை உறுப்பினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அரசாங்கத்தின் ஒருசில துறைகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமித்துள்ளமையே இவர்களின் பிரச்சினையாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை சிவில் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவது மற்றும் தகுதியான இராணுவத்தினரை உரிய துறைகளில் ஈடுபடுத்தி பிரச்சினைகளை தீர்ப்பது என்பன எந்த விதத்திலும் தவறான நகர்வுகள் அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை எனவும் இதனை எழுத்துமூலம் அறிவிப்பை அனுப்பியுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஆணையாளரின் அறிக்கையை அரசாங்கம் ஆதரிப்பதாக கூறும் எந்தவொரு நடவடிக்கைக்கும் நாம் பொறுப்பு இல்லை எனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.