January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சக்தி மாதமான ஆடியின் சிறப்பும் ஆடிப்பிறப்பும்!

மாதங்கள் பன்னிரெண்டு, அதில் தமிழ் மாதங்களின் நான்காவதாக வரும் ஆடி விசேட சிறப்புக்களை கொண்டது.

ஆடிமாதம் முதலாம் திகதி தெட்சணாயன காலம் ஆரம்பமாகிறது. ஆண்டினை இரண்டு அயனங்களாகப் பிரிப்பர். அயனங்கள் என்பது கதிர்நகர்வு ஆகும்.

தைமுதல் ஆனி வரையான காலம் உத்தராயணம் என்றும் (வடதிசை நகர்தல்) ஆடி முதல் மார்கழி வரையான காலம் தெட்சணாயனம் (தென் திசை நகர்தல்) என்றும் கூறப்படுகிறது.

மனிதர்களுக்கு ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாளாகும். தை முதல் ஆனி வரையுள்ள காலம் தேவர்களுக்கு பகற்பொழுதாகவும் ஆடிமாதம் முதல் மார்கழி மாதம் வரையுள்ள காலம் இரவுக் காலமாகவும் கருதப்படுகின்றது.

ஆடி மாதம் முதல் திகதியில் தேவர்கள் பூவுலகம் வருவதாக ஐதீகம். இதனால் தான் மக்கள் ஆடிமாதம் முதலாம் திகதியை மகிழ்வுடன் வரவேற்கிறார்கள்.

ஆடிமாதம் ஒரு மாதமும் சுப காரியங்கள் யாவும் விலக்கப்பட்டு சமய விரதங்கள், விழாக்கள் போன்றவற்றை நடாத்தும் ஆன்மீக மாதமாக கொண்டாடுகின்றனர்.

ஆடிமாதம் அம்மனுக்கு விசேட மாதமாகக் கருதப்படுகின்றது. அம்மன் ஆலயங்களில் பெண்கள் பால்குடம் எடுத்து அம்மனை வழிபடுவர்.

அம்மனுக்கு எலுமிச்சம் காய் மாலை, வேப்பிலை மாலை சாற்றியும் எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றியும் வழிபடுவர்.

வீடுகளிலும் மஞ்சள் நீர் தெளித்து தூய்மைப்படுத்தி அம்மன் தங்கள் இல்லங்கள் வருவதுபோல் மகிழ்ச்சியாக இருப்பர்.

ஆடிக்கூழ் குடிப்பதற்கு அம்மன் தேடி வருவதாக ஒரு ஜதீகம்.

அம்மனின் அவதார நாளாகவும் அம்மன் பூப்பெய்த நாளாகவும் ‘ஆடித்தபசு’ அம்மன் விரதம் இருந்த நாளாகவும் புராணங்கள் கூறுகின்றன.

அதுமட்டுமன்றி பிதிர்களும் ஆடிமாதம் பூலோகம் வருவதாக கூறுவார்கள். ஆடி அமாவாசை பிதிர் செய்யும் நாளாகவும் கூறப்படுகிறது.

பிதிர்களுக்கு விரதம் இருந்து சிறந்த அவர்களின் ஆத்மாவிற்கு உணவு படைத்து காகத்திற்கு வெளியில் உணவு படைத்து மற்றவர்களுக்கும் தானம் கொடுத்து அவர்களை மகிழ்வித்து அவர்களின் ஆசீர்வாதம் பெறுகிறார்கள்.

இவ்வாறு ஆடிமாதம் பல சிறப்புக்கள் நிறைந்த மாதமாக அமைகின்றது.

ஆடிப்பிறப்பு

ஆடிப்பிறப்பு என்பது மிகவும் மகிழ்ச்சி நிறைந்த பண்டிகை ஆகும். மற்றைய மாதங்களை விட ஆடிப்பிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பண்டிகையாக தமிழர் கொண்டாடுகிறார்கள்.

இது தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும்.

ஆடிப்பிறப்பு எமது தாயகமாகிய ஈழத்திலும் தமிழகத்திலும் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

எமது தாயகத்தில் ஆடிப்பிறப்பென்றால் கூழும் கொழுக்கட்டையும் தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். ஆடிப்பிறப்பு சிறுவர்களும் முதியவர்களும் சேர்ந்து கொண்டாடும் ஒரு நிகழ்வாகும்.

தெட்சணாயன காலத்தின் ஆரம்ப தினம் ஆடிமாதம் முதல் நாளாகும். இக்காலம் கோடைக்காலம் வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாக பெருகும்.

ஆடிக்கூழ்-கொழுக்கட்டை 

ஆடிப்பிறப்பு அன்று வீடுகளில் கூழ் காய்ச்சி கொழுக்கட்டை அவித்து எல்லோரும் கூடியிருந்து உண்ணும் வழக்கம் இன்றும் தாயகத்தில் உள்ளது.

தைப்பொங்கல் தைமாதத்தின் சிறப்புப்போல் ஆடிப்பிறப்பு ஆடிமாதத்தின் சிறப்பாகும்.

முற்காலத்தில் சூரியனை இயற்கையாக வழிபட்டனர்.

சூரியனை வழிபடும் சமயம் ‘சௌரம்’ என்று அழைக்கப்பட்டது. சூரிய பகவானை ஆடிமாதத்திலும் வழிபாடு செய்து கொண்டாடுவது புண்ணிய தினமாகும்.

இதனை உணராமல் ஆடிப்பிறப்பை மக்கள் கொண்டாடாமல் விடுகின்றனர். தை மாத்தில் பொங்கல் பொங்குவது போல ஆடி மாதத்தில் கூழ் முக்கியத்துவம் பெறுகிறது.

ஈழத்தில் வாழும் தமிழ் மக்கள் சாதாரணமாக ஒடியல் மாவில் கூழ் காய்ச்சி குடிப்பார்கள்.

ஆனால் ஆடிப்பிறப்பன்று அரிசி மாவில் கூழ்க்காய்ச்சி குடிப்பார்கள். கூழுக்கு அரிசிமா, பயறு, பனங்கட்டி, தோங்காய்ப்பால், வெல்லம், என்பனவற்றை சேர்த்து கூழ் காய்ச்சுவர்.

ஆடிப்பிறப்பு அன்று இந்த இனிப்புக்கூழ் காய்ச்சுவதால் ‘ஆடிக்கூழ்’ என்ற சிறப்புப்பெயரை பெறுகிறது.

அன்று கூழ் மட்டுமல்ல கொழுக்கட்டையும் அவிப்பர்.

வீட்டில் சுவாமி அறையில் நிறைகுடம் வைத்து வெற்றிலை, பாக்கு, முக்கனி, படைத்து தூபதீபம் காட்டி வழிபடுவர்.

பின்னர் வீட்டில் உள்ள அனைவரும் கூடியிருந்து கூழ்குடிக்கும் நிகழ்வு குடும்ப உறவுகள் சேர்ந்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும்.

கூழ் குடிப்பதற்கு பலாவிலை எடுத்து அதைக்கோலி அதற்குள் கூழை ஊற்றிக்குடிப்பார்கள். கொழுக்கட்டையும் சேர்த்து உண்டு மகிழ்வர்.

குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டம். இனிப்புக்கூழ் அலாதி பிரியமுள்ளதாக இருக்கும்.

மாலை நேரத்தில் இறந்த மூதாதையருக்கும் இவற்றைப் படைத்து அவர்களும் வந்து உண்ணுவதாக நினைத்து மகிழ்வர்.

இன்றைய நிலையில் தாயகத்தில் எல்லோராலும் இதைக் கடைப்பிடிக்க முடியாது. அவர்களின் சோகமும் ஏழ்மையும், அவர்களுக்கு ஆடிக்கூழை நினைத்துப்பார்க்க முடியாமல் இருக்கும்.

உறவுகளை இழந்து அவர்களை நெஞ்சிலே சுமந்து தங்களால் இயன்றதையாவது செய்து இந்நாளை நினைவு கூறுவர்.

பல வருடங்களுக்கு முன் ஈழத்தில் ஆடிப்பிறப்பிற்கு விடுமுறை தினம் பாடசாலைகள் விடுமுறை என்றால் குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டம்.

ஆனால் அன்றைய நிலை இன்று இல்லை. அதனால் ஆடிப்பிறப்பு தினத்தையே மக்கள் மறந்து விடுகிறார்கள்.

இந்நிலை மாறி ஆடிப்பிறப்பு விடுமுறை நாளாக மீண்டும் வர இந்து கலாசாரப் பிரிவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நாளில் சிறப்பை அடுத்த தலைமுறையினர் ஏன் கொண்டாடுகிறோம் என்பதை எடுத்துக்கூற வேண்டும்.

ஆடிப் பிறப்பிற்கு நாளை விடுதலை என்று நாவாலியூர் சோம சுந்தரப்புலவர் பாடிய பாடல் அன்றைய பாடத்திட்டத்தில் இருந்தது. அதை எல்லோரும் மனப்பாடம் செய்தார்கள்.

புலவரின் இலகு நடை, இனிமையான பாடல், சிறுவர்களும் விரும்பிப் படிக்கும் அளவிற்கு கூழையும் கொழுக்கட்டையையும் பாடலில் தித்திக்கத் தந்துள்ளார்.

கூழும் கொழுக்கட்டையும் செய்யும் முறையையும் புலவர் அழகாக தன் கவித் திறனால் காட்டியுள்ளார். புலவரின் பாடலைக் கீழே காணலாம்.

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூருச் சக்கரையும் கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே வைத்துப்
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்க வாய் ஊறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூட்டியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் வெற்றிலை பாக்குடன்
ஆடிப் புதுக்கூழும் குடிப்போமே

வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே..!

(நவாலியூர் -சோமசுந்தரப்புலவர்)

ஆடிப்பிறப்பைப் பற்றி குழந்தைகளும் புரிந்துகொள்ளும் அளவிற்கு பாடலை தந்த தங்கத் தாத்தா நவாலியூர் சோம சுந்தரப்புலவரை இன்றை ஆடிப்பிறப்பு பண்டிகை தினத்தில் நினைவு கூர்ந்து அவருக்கு நன்றி செலுத்துவோம்.

ஆடிப்பிறப்பு விதைப்பு தொடங்கும் மாதமாகிய உழவர் திருநாள் தைப்பொங்கல் அறுவடை முடித்து பயன்பெறும் உழவர் திருநாள்.

எனவே இந்த ஆடிப்பிறப்பு புண்ணிய நாளில் சூரிய தேவனை வணங்கி முன்னோரது ஆசியையும் பெறுவோம்.

-தமிழ்வாணி (பிரான்ஸ்)


(படங்கள்: நன்றி மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம்)