May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

செல்வ வளம் பெருகும் ‘அட்சய திருதியை’

மாதங்கள் பன்னிரெண்டு. அவற்றுள் இருபத்து நான்கு திருதியை திதிகள் வருகின்றன. அவற்றுள் சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை திதி மிகவும் விசேடமானது.

பதினைந்து திதிகளில் மூன்றாவது திதி ‘ திருதியை திதியாகும்’ சித்திரை வளர்பிறையில் வரும் திருதியை திதி அட்சய என்ற அடைமொழி சேர்த்து “அட்சய திருதியை” என்ற சிறப்பைப் பெறுகிறது.

‘அட்சயம் என்பது வடமொழி சொல்லாகும். அட்சயம் என்றால் தமிழில் வளர்தல் என்ற பொருளைத் தரும்.

இந்த திருதியை பற்றி புராணங்கள் இதிகாசங்கள் சிறப்பித்துக் கூறுகின்றன.

அதனால் தான் இந்து மத மக்கள் இந்நாளை புனித நாளாக புண்ணிய நாளாக கொண்டாடுகின்றனர்.

இந்த நாள் நல்ல பலன்களையும் செய் தொழில் வெற்றியையும் தரும் நாளாக முன்னோர்கள் கருதினர்.

அட்சய திருதியையில் தொடங்கும் வணிகளம், வீடு குடி புகுதல், கல்வி கற்க ஆரம்பித்தல், திருமணம் செய்தல், போன்ற மங்களகரமான காரியங்கள் செய்யும் நாளாகவும் கருதினர்.

விலை மதிப்பற்ற பொருட்களை பொன், வெள்ளி, வைரம் போன்ற விலை மதிப்பற்றவைகளை வாங்குவது நன்மையும் வெற்றியும் தரும் என கருதப்பட்டது.

ஆனால் எல்லோராலும் விலையுயர்ந்த பொருட்களை வாங்கமுடியாது.

அவரவர் இயல்பிற்கு தகுந்த பொருட்களை வாங்கலாம், இக்காலத்தில் இது வியாபார நோக்கமாக மாறியுள்ளது.

இந்த நாளில் எல்லோராலும் செய்யக்கூடியது புண்ணிய தீர்த்தங்களில் நீராடி இறைவனை வழிபடுவதாகும்.

ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோருக்கு செய்யும் தான தர்மங்கள் கொடுப்பவர்களுக்குப் புண்ணியம் சேரும்.

அட்சய திருதியை அன்று பாவங்களைப் போக்கி புண்ணியங்களைத் தேடும் நாளாகும். ஆயிரம் பேருக்கு அன்னதானம் கொடுக்க முடியாவிட்டாலும் யாராவது ஒருவருக்காவது உணவோ, அல்லது ஆடையோ தானம் கொடுத்தால் ஆயிரம் பேருக்கு கொடுத்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அன்றைய தினம் மகாலட்சுமியை வரவேற்று வணங்கினால் செல்வம் பெருகும்.

சில விடயங்களைச் செய்யும் பொழுது மகாலட்சுமியின் அருட் பார்வை கிடைத்து செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

மகாலட்சுமி கல் உப்பில் வாசம் செய்வதாக ஐதீகம். மஞ்சங்களிலும் இலக்குமி வாசம் செய்கிறாள்.

தங்கம் வாங்க முடியாதவர்கள் அன்றைய தினம் கல் உப்பு, மஞ்சள், என்பவற்றை அட்சய திருதியை அன்று வாங்கி சுவாமி அறையில் படத்தட்டில் வைத்து மகாலட்சுமிக்கு தீபாரதணை காட்டி வணங்கினாலே போதும்.

வறுமை இன்றி வீட்டில் செல்வம் நிலையாக நிச்சயமாக உயரும் என்பது நம்பிக்கையாகும்.

சுக்கிரனுக்கு உகந்த வெள்ளி அல்லது வைரம் வாங்கினால் சுகபோக வாழ்க்கை அமையும் என்பது முன்னோர்கள் நம்பிக்கை. சுக்கிரன் சுகபோக வாழ்க்கையை கொடுக்கக் கூடியவர்.

அட்சய திருதியை நாளில் சுக்கிரனுக்கு உரிய பச்சை அரிசி அல்லது மொச்சை விதை இவற்றில் வெள்ளி அல்லது வைரம் நகைகளை வெள்ளைப்பட்டுத் துணியில் முடிந்து வைப்பதால் வீட்டில் செல்வம் வளர்ந்து கொண்டே செல்லும் என்பது ஐதீகம்.

அட்சய திருதியை நாளின் சிறப்பு

முதல் யுகமான கிரேதாயுகத்தில் பிரமனால் உலகம் தோற்றுவிக்கப்பட்டது. திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றான பரசுராமர் அவதரித்த நாளாகும்.

இன்றும் ‘கோவாவும் கொங்கண்’ பகுதியும் பரசுராம சேத்திரங்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

பகீரதன் ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டு வந்த நாளாகும்.

காசியில் அன்னபூரணி தாயாரிடம் இருந்து சிவபெருமான் பிட்சா பாத்திரம் நிரம்பும் அளவு உணவு பெற்றது.

திரௌபதியின் மானம் காக்க கண்ணன் திரௌபதியின் திசையில் ‘ அட்சயம்’ என்று கூறி கையசைக்க அவளின் ஆடை வளர்ந்தது இந்நாளில் ஆகும்.

குபேரன் இலக்குமியை வணங்கி நிதி கலசங்கள் பெற்றது. மணிமேகலைக்கு அட்சய பாத்திரம் கிடைத்தது அட்சய திருதியையில் ஆகும்.

Akshaya Tritiya

பாண்டவர்களுக்கு கண்ணன் அட்சய பாத்திரம் வழங்கியது இந்நாள் ஆகும்.

அன்னை பராசக்தி பூமியில் செடி, கொடி, மரங்கள் என்பவற்றை உருவாக்கியது.

அட்சய திருதியை அன்று தான் வேத வியாசர் மகாபாரதத்தை விநாயகரிடம் எழுதும்படி கூறியது.

இந்நாளில் குபேர லட்சுமி பூசை செய்வது சாலச் சிறந்தது. இதனால் லட்சுமி, குபேரனின் அருள்கிடைக்கும்.

பிதிர்களுக்கு உணவு படைத்து காகத்திற்கு உணவு வைத்தல் பிதிர்களின் ஆசியும் நாம் செய்த பாவங்களும் விலகும்.

அட்சய திருதியையில் தயிர் சாதம் ஏழைகளுக்கு கொடுத்தால் 11 தலைமுறைகள் பாவங்கள் விலகி புண்ணியம் சேரும்.

அட்சய திருதியை நாளில் பெருமாள், சிவன், அம்பாள், முருகன் குலதெய்வ வழிபாடும் எல்லோருக்கும் நன்மை கிடைக்கும்.

இந்நாளில் எங்களால் இயன்ற தான தருமங்கள் செய்தால் செல்வம் வந்து சேரும் என்பதில் ஐயமில்லை.

-தமிழ்வாணி (பிரான்ஸ்)