May 9, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மாறுபடு சூரரை வதைத்த முகம்’: துயரங்கள் போக்கும் கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்

முருகப்பெருமான் சூரனை சங்கரித்த பெருமையை நினைத்து நோற்கும் விரதம் கந்தசஷ்டி நோன்பாகும்.

முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் கந்தசஷ்டி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

கந்தசஷ்டி விரதம் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியை இறுதி நாளாகக் கொண்டு கடைப்பிடிக்கப்படுகின்றது.

இம்முறை ஐப்பசி 27 (நவம்பர் 13 ஆம் திகதி)  பிரதமை திதியில் ஆரம்பமாகி கார்திகை 3 (நவம்பர் 19ஆம் திகதி) நிறைவடைகின்றது.

ஆறு நாட்களும் முருகனை நினைத்து விரதம் இருக்க வேண்டும். கந்தசஷ்டி விரதம் நோற்பவர்கள் அவர்கள் வசதிக்கேற்ப அவர்களது உடல் நிலைக்கு ஏற்ப இவ்விரதத்தை அனுஷ்டிக்கலாம்.

ஆறு நாட்கள் மூன்று மிளகும் தண்ணீரும் அருந்தி விரதம் இருப்பவர்களும் உண்டு. சிலர் ஆறு நாட்கள் இளநீர் அருந்தி நோற்பவர்களும் உண்டு.

6 நாட்களும் பால், பழம் அருந்துபவர்களும் உண்டு. பகல் ஒரு வேளை உணவு உண்டு விரதம் இருப்பவர்களும் உண்டு. மேலும் சிலர் ஆறு நாட்களும் உபவாசம் இருந்து ஏழாம் நாள் அதிகாலை பாரணை மேற்கொள்வர்.

கந்தசஷ்டி காலங்களில் விரதம் அனுஷ்டிப்பவர்கள் ஆலயங்களுக்குச் சென்று பூஜைகளில் கலந்து முருகனை வழிபடுதல் வேண்டும்.

தர்ப்பை அணிந்து ஆறு நாட்களும் விரதம் அனுட்டித்தல் வேண்டும்.

முருகன் ஆலயங்களில் கந்தபுராண பாடல் வாசிக்கப்படும். ஒருவர் படிக்க மற்றவர் அதற்குரிய பொருள் கூறுவார். அதைக் கேட்டு கொண்டிருப்பவர்களுக்கு முருகனை நேரில் தரிசித்த உணர்வு ஏற்படுகிறது.

ஆலயத்துக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தும் விரதத்தை கடைபிடிக்கலாம்.

இந்த நாட்களில் கந்தசஷ்டி கவசம், கந்தர் அனுபூதி, கந்தரலங்காரம், திருப்புகழ், சண்முகக் கவசம் போன்ற நூல்களைப் படிப்பது சிறப்புள்ளதாகும்.

“சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்ற ஒரு பழமொழி நீண்ட காலமாக வழக்கில் இருந்து வருகின்றது.

சஷ்டி திதியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்பது தான் அது என்று அதற்கு விளக்கம் கோருவோரும் உண்டு.

அதாவது குழந்தை இல்லாதவர்கள் இவ்விரதத்தை பக்தியுடன் நோற்றால் முருகனே குழந்தையாக பிறப்பான் என்பது முன்னோர் நம்பிக்கை.

திருமணமாகாத ஆண்கள், பெண்கள் விரதம் அனுட்டித்தால் அவர்களுக்கு திருமணம் விரைவில் கைகூடும் என்றும் கூறுவர்.

முருகனின் அவதாரமும் பெருமைகளும்

அருவமும் உருவம் ஆகி
அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப்
பிழம்பதோர் மேனி யாகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும்
கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒரு திரு முருகன் வந்தாங்கு
உதித்தனன் உலகம் உய்ய

                                            (கந்தபுராணம்)

-என்று முருகப்பெருமானின் திரு அவதாரச் சிறப்பை கச்சியப்ப சிவாச்சாரியார் மிக அழகாகக் கூறியுள்ளார்.

தேவர்களை சூரன் துன்புறுத்தி வந்தான். அவர்கள் தங்கள் துயரைத் தீர்க்கும்படி சிவனை வேண்டினர். சிவனும் இரங்கி தன் நெற்றிக்கண்ணை திறந்தார்.

அவரது நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் சரவணப்பொய்கையில் போய் விழுந்தன. ஆறு தீப்பொறிகள் ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாக மாறின அவர்களைக் கார்த்திகைப் பெண்கள் எடுத்துப் பாலூட்டி வளர்த்தனர்.

அன்னை உமாதேவியார் ஆறு குழந்தைகளையும் ஒன்றாக கட்டி அனைத்தார். குழந்தைகள் ஆறுமுகத்துடனும் பன்னிரண்டு கரங்களுடன் ஒன்று சேர்ந்தன. முருகன் என்ற பெயர் பெற்று சூரனை அழிப்பதற்கான அவதாரம் பெற்றது குழந்தை.

‘முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பவன் தமிழ்க் கடவுள் முருகன் கலியுகத்தில் கண்கண்ட தெய்வம்.

முருகு என்றால் அழகு, இளமை என்ற பொருள் கொள்ளப்படும். முருகன் என்றால் அழகன் என்று கூறுவர்.

முருகனுக்கு பல பெயர்கள் உண்டு; கந்தன், கடம்பன், கார்த்திகேயன், சரவணபவன், சண்முகன், வடிவேலன், சுவாமிநாதன், சுப்பிரமணியன், முத்துக்குமரன், ஆறுமுகன், மயில்வாகனன், தண்டாயுதபாணி என்ற பல பெயர்களால் அழைக்கப்படுகின்றார்.

ஒவ்வொரு நாமத்திற்கும் ஒவ்வொரு பொருளுமுண்டு. முருகனின் சகோதரன் விநாயகர். ஒருமுறை சிவனும் பார்வதியும் திருக்கைலாயத்தில் இருக்கும்போது நாரதர் அங்கே வருகிறார். ஒரு மாம்பழத்தைக் கொண்டு வந்து அவரிடம் கொடுக்கிறார்.

சிவபெருமான் ஒரு போட்டி வைக்கிறார். விநாயகரையும் முருகனையும் அழைத்தார். உலகத்தை முதலில் யார் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்குத் தான் இந்த ஞானப்பழம் என்று கூறினார். முருகன் மயில் மீது ஏறி உலகைச் சுற்றி வரப் புறப்பட்டார். விநாயகர் தாய் தந்தையரை சுற்றிவந்து மாம்பழத்தைப் பெற்றுக்கொண்டார்.

முருகன் வந்து பார்க்கிறார் விநாயகரின் கையில் மாம்பழம் இருப்பதைக் கண்டு சினம் கொள்கிறார். கோபித்துக்கொண்டு புறப்படுகிறார். ஆண்டிக் கோலத்துடன் பழனியில் நின்றார்.

சிவனும் உமாதேவியாரும் அவரை சமாதானம் செய்து அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் தத்துவம் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதுதான்.

பெற்றோர்தான் நாம் முதல் கண்ட தெய்வமாகும். இதை விநாயகரே தாய்-தந்தையரை வணங்கி உலகுக்கு உணர்த்தினார்.

குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று சொல்வார்கள். குறிஞ்சி நில மண்ணில் குமரன்குடி கொண்டான். அதனால் தான் முருகனது ஆறுபடை வீடுகளும் அவனது அருளையும் பெருமையையும் உணர்த்தி நிற்கின்றன.

சூரன் போர்

தேவர்களைத் துன்புறுத்திய அசுரர்கள் வேறு யாருமல்ல. காசியப்ப முனிவருக்கும் மாயைக்கும் அறுபத்தாறு கோடி பிள்ளைகள் தோன்றினர்.

அவர்களுள் மூத்தவன் தான் சூரபத்மன். அவனது சகோதரர்களுள் தாரகாசுரன், சிங்கமுகன் அவனுக்கு உறுதுணையாக இருந்தவர்கள்.

சூரன் சிவபெருமானை நினைத்து பல வருடங்கள் தவம் இருந்தான். ஆனால் சிவபெருமான் காட்சியளிக்கவில்லை. 108 அக்கினி குண்டங்கள் உருவாக்கி யாகம் செய்தான். அப்போதும் சிவன் வரவில்லை. சூரன் அந்த யாகத்திற்குள் விழுவதற்கு தயாராகும் போது சிவன் அவன் முன் தோன்றினார்.

சூரனிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார் சிவன். தான் உலகங்களை ஆட்சி செய்ய வேண்டும். பெண்ணால் உருவாக்கப்படாத ஒரு சக்தியால் மட்டுமே தனக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டான்.

சிவனும் அவ்விதம் வரத்தை அளித்தார். அதனால் தான் தனது நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய பொறிகளால் முருகனை தோற்றுவித்தார்.

சூரனின் முடிவு முருகனால் நெருங்கியது. தேவர்களும் இந்நாளை எதிர்பார்த்திருந்தார்கள். பார்வதி தேவி தன் கொலுசு மணியிலிருந்து வீரபாகு தேவரை உருவாக்கினார்.

முருகன் தன் படைத் தலைவனாக வீரபாகுவை நியமித்தார். வீரபாகுவை சூரனிடம் தூதுவனாக அனுப்பினார்.

சூரனிடம் தேவர்களை விடும் படியும், சமாதானமாக வாழும் படியும் தூதுவனாக சென்ற வீரபாகு கேட்டான். சூரன் சம்மதிக்கவில்லை.

போர் மூண்டது. ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் 6 நாட்கள் போர் நடந்தது. தாரகாசுரன், சிங்கமுகன் சகோதரர்கள் போரில் மடிந்தார்கள். சூரன் தனித்து நின்று போர் செய்தான். அன்னை பார்வதியும் வேல் கொடுத்து முருகனை அனுப்பி வைத்தார்.

சூரன் மாயையின் மகனல்லவா. தன் மாயாஜாலங்களைக் காட்டினான். மாமரமாக நின்றான். முருகன் தன் கூரிய வேலால் மாமரத்தை இரண்டாகப் பிளந்தார்.

ஒரு பகுதி மயிலாகவும் ஒரு பகுதி சேவலாகவும் மாறியது. சூரனை சம்ஹாரம் செய்த தினம் ஐப்பசி மாதம் சஷ்டி தினமாகும்.

சூரனின் ஆணவத்தை அழித்தார் முருகன். மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியாகவும் ஏற்றார்.

சூரனை அழித்த இந்த நாளை அனைவரும் முருகனை நினைத்து விரதம் அனுஷ்டிக்கிறார்கள். இதுவே கந்தசஷ்டி உருவாகுவதற்கு காரணமானது.

முருகனின் அறுபடை வீடுகள்

திருப்பரங்குன்றம் – முருகன் தெய்வானையை திருமணம் புரிந்த தலம்.

திருச்செந்தூர் – சூரபத்மனோடு போர் புரிந்து வெற்றி பெற்ற தலம்.

பழனி – ஞானப்பழம் கிடைக்காததால், கோபம் கொண்டு ஆண்டியின் கோலம் பூண்டு தங்கிய தலம்.

திருவேரகம் (சுவாமிமலை) – சிவனுக்கு உபதேசம் செய்த தலம்.

 திருத்தணிகை– வள்ளியை திருமணம் புரிந்த தலம்.

 பழமுதிர்ச்சோலை (அழகர்மலை) – சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்த தலம்.

தமிழ்க் கடவுள் முருகன்

முருகனின் ஆறு முகங்களின் பெருமையை அருணகிரிநாதர் திருப்புகழில் அழகுடன் கூறியுள்ளார்.

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

ஆறுமுகத்தை கண்டால் அடியவருக்கு ஏறுமுகம் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

முருகனைத் தமிழ்க்கடவுள் என்று சொல்வார்கள். ஏன் முருகனை மட்டும் தமிழ் கடவுள் என்கிறோம்.

எமது தொன்மையான தமிழ் மொழிக்கும் முருகனுக்கும் தொடர்பு இருக்கிறது. முருகு என்றால் அழகு. அதுபோல தமிழ் மொழியும் முருகனால் அழகு பெறுகிறது.

தமிழ் மொழியில்  உயிரெழுத்துக்கள் 12, அதுபோல முருகனின் திருக்கரங்கள் 12,  தமிழில் மெய்எழுத்து 18. முருகனின் திருமுகம் ஒவ்வொன்றிலும் மூன்று விழிகள், முருகனுக்கு மொத்தம் 18 விழிகள் உண்டு.

தமிழ் இன எழுத்துக்கள் ஆறு (வல்லினம், மெல்லினம், இடையினம்) சரவணபவ என்ற முருகனின் ஆறு எழுத்து மந்திரத்தைக் குறிக்கும். ஆய்த எழுத்தின் (ஃ) மூன்று புள்ளிகளும் முருகனின் வேல்  வடிவத்தை உணர்த்துகின்றது.

முருகன் நூல்கள்

முருகன் தமிழை சுவைத்தவன். அதனால் அருணகிரிநாதரால் திருப்புகழை பாடுவித்தான். கந்தரலங்காரம், கந்தரனுபூதி, கந்தரந்தாதி இவையும் அருணகிரிநாதரால் அருளப்பட்டவை.

வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம் இவையும் அருணகிரிநாதரின் அருள் பாடல்களாகும்.

கந்தசஷ்டி கவசம் தேவராஜ சுவாமிகளால் அருளப்பட்டது. இதில் அறுபடை வீடுகளுக்கு உரிய ஆறு கவசங்கள் உள்ளன. சண்முக கவசம் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளால் அருளப்பட்டது.

திருமுருகாற்றுப்படை நக்கீரர் அருளிய ஒரு நூலாகும். முருகனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு அறுபடை வீடுகளையும் உள்ளடக்கிய சங்ககால நூல்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

வள்ளலார் அருளிய திருவருட்பாக்களும் முருகனின் புகழ் கூறுகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக கந்தனின் வரலாற்றைக் கூறும் நூல் கந்தபுராணம் ஆகும். இது கச்சியப்பரால் எழுதப்பட்டது. மூன்று தலைசிறந்த புராணங்களில் கந்த புராணம் சிவனின் நெற்றிக் கண்ணாக கருதப்படுகிறது.

இன்னும் பலர் முருகனுக்கு பாமாலை சாத்தியுள்ளார்கள். எனவே முருகனின் அருளையும் பெருமையையும் சொல்வதற்கு அளவே இல்லை. இந்நாளில் அவன் புகழைப் பாட வேண்டும்.

அவரை மனதில் எண்ண வேண்டும். கந்தசஷ்டி பெருவிழாவில் அனைவருக்கும் முருகனின் திருவருள் கிடைக்க வேண்டும்.

 

விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள், முன்புசெய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும், பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.

 (கந்தரலங்காரம்)