May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் ‘கெடுபிடிகளுக்கு நடுவே’ நினைவுகூரப்பட்ட ‘மாவீரர் நாள்’

தமிழீழ விடுதலைப் புலிகளின் மரணித்த போராளிகளை நினைவுகூரும் நவம்பர்-27  ‘மாவீரர் நாள்’ நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த அனுமதிக்க முடியாது என்று இலங்கை அரசு தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த காலங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்பட்ட துயிலும் இல்லங்களிலும், பொது இடங்களிலும் இம்முறை அவற்றை நடத்த முடியாதவாறு காவல்துறையினர் நீதிமன்றங்களில் தடையுத்தரவு பெற்றிருந்தனர். இந்தத் தடைகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரச தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வடக்கு- கிழக்குப் பிரதேசங்களில் இன்றைய தினம் இராணுவத்தினரும் காவல்துறையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்தக் கெடுபிடிகளுக்கு நடுவிலும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மக்களும் அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரமுகர்களும் தங்களின் வீடுகளிலும் தனிப்பட்ட இடங்களிலும் இன்று மாலை விளக்கேற்றி நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்தனர்.

யாழ்ப்பாணம்

வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதல்வரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தனது இல்ல வளாகத்தில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்.

“தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிர்களைத் தியாகம் செய்த விடுதலை வீரர்கள் ஒவ்வொருவரும் எம் மக்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்துகொண்டு இருப்பர்” என்று விக்னேஸ்வரன் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார்.

இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிர்நீத்த தளபதிகள் இருவரது தந்தையார் நினைவுச் சுடரினை ஏற்றினார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறையில் உள்ள தனது வீட்டோடு இணைந்த அலுவலகத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவர் கோ.கருணானந்தராசாவும் அவருடன் இனைந்து அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் இன்று மாலை தீச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

அருட்தந்தை கைது

இதனிடையே, யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்கு முன்பாக மாவீரர் அஞ்சலி நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்த அருட்தந்தை பாஸ்கரன் காவல்துறையினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட அருட்தந்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் கூறினர்.

அவ்வாறே, பருத்தித்துறை சுப்பர்மடத்தில் வீடொன்றின் முன்றலில் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த போது, அங்கு விரைந்த காவல்துறையினரும் இராணுவத்தினரும் அதற்கு தடை விதித்திருந்தனர்.

இதனையடுத்து அந்த வீட்டார், போரில் மரணித்த தங்களின் இரண்டு பிள்ளைகள் மற்றும் மருமகனை வீட்டுக்குள்ளேயே விளக்கேற்றி நினைவுகூர்ந்துள்ளனர்.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினர், காவல்துறையினர், புலனாய்வாளர்களின் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பல இடங்களில் அஞ்சலி விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன.

பொது இடங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்யவோ அல்லது ஒன்றுகூடி நினைவேந்தல் நடத்தவோ முடியாதவாறு காவல்துறையினர் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றிருந்தனர்.

ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர், மோட்டார் சைக்கிள் இராணுவ அணியினர், பொலிஸார், கடற்படையினர், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் என படையினர் வீதிகளில் குவிக்கப்பட்டிருந்தனர்.

எனினும் போரில் தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர் தத்தமது வீடுகளுக்குள்ளும், வாசல்களிலும் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களைச் சூழ நூற்றுக்கணக்காண இராணுவத்தினரும், பொலிஸாரும் இன்று குவிக்கப்பட்டிருந்தனர்.

இதனிடையே, பரந்தன் சந்தியில் விளக்கேற்றிய ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் கூறுகின்றன.

வவுனியா

வவுனியாவிலும் மக்கள் வீடுகளில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் மாகா றம்பைக்குளம் இத்தியடி விநாயகர் ஆலயத்தில் சுடர் ஏற்றி நினைவேந்தலில் ஈடுபட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்களின் போராட்ட பந்தலில் மண்டியிட்டு பிரர்த்தனையில் ஈடுபட்டிருந்தனர்.

மன்னார்

மன்னாரில் பிரத்தியேக இடம் ஒன்றில் இன்றைய தினம்  நினைவேந்தல் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் பிரதிநிதிகள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.

மன்னார் மாவட்டத்தில் பொது இடங்களில் மாவீரர் நினைவேந்தல் நடாத்த நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மக்களை ஒன்றுகூட்டாது பிரத்தியேக இடம் ஒன்றில் இந்த நினைவேந்தல் ஒழுங்கு செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.