May 14, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் முதல் கட்டமாக கிராமப்புறப் பாடசாலைகளை திறக்க திட்டம்!

இலங்கையில் முதல் கட்டமாக 100 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட கிராமப்புற பாடசாலைகளை திறப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.

கொரோனா தொற்று காரணமாக நீண்ட நாட்களாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், பாடசாலைகளை திறப்பதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு ஜனாதிபதி இரு தினங்களுக்கு முன்னர் பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்நிலையில், பொது போக்குவரத்தை பயன்படுத்தாத கிராமப்புற பாடசாலைகளை முதல் கட்டமாக திறப்பதன் மூலம் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதால் மாணவர்களுக்கு ஏற்படும் கொவிட் தொற்று அச்சுறுத்தலை தவிர்க்க முடியும் என கொவிட் -19 கட்டுப்பாட்டு குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

சுகாதார நிபுணர்களிடமிருந்து பரிந்துரைகள் கிடைத்தவுடன் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன மேலும் கூறினார்.

இருப்பினும், நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளமைக்கு அமைய மாற்றுத் திறனாளியான சிறுவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி  போடும் பணி அடுத்த வாரம் முதல் தொடங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், ஒக்டோபரில் இலங்கைக்கு நான்கு மில்லியன் அளவிலான ஃபைசர் தடுப்பூசிகள் கிடைக்க உள்ளதாகவும் அதனை பாடசாலை சிறுவர்களுக்கு வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.