January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஒக்ஸிஜன் தேவை

இந்தியாவில் தினமும் 7,500 மெட்ரிக் டன் ஒக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 6,600 மெட்ரிக் டன் ஒக்சிஜன், மாநில அரசுகளின் தேவைகளுக்கு ஏற்ப பிரித்து வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

தலைநகர் டெல்லிக்கு 378 மெட்ரிக் டன் மருத்துவ ஒக்ஸிஜன், மத்திய அரசு தொகுப்பிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது

சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களிடம் டெல்லி மாநில துணை முதல்வர் வழங்கிய புள்ளிவிவரங்களின்படி, மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தினமும் 700 மெட்ரிக் டன் ஒக்ஸிஜன் தேவைப்படுவதாக கூறியிருந்தார்

இதனிடையில் டெல்லி உயர்நீதிமன்றம், பிச்சை எடுங்கள், திருடுங்கள், கடன் வாங்குங்கள்… ஆனால், மக்களை காப்பாற்ற உடனடியாக ஒக்ஸிஜன் சப்ளை செய்யுங்கள்’ என இந்திய மத்திய அரசை கடுமையாக சாடியிருந்தது.

டெல்லிக்கு வரும் ஒக்ஸிஜன் லொரிகளை பிற மாநிலங்கள் எடுத்துக்கொள்வதால் ஒக்ஸிஜன் உற்பத்தியையும் விநியோகத்தையும் ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டுமென டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

இருப்பினும் முப்படைகளும் கொரோனா எதிர்ப்பு போரில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதில் விரைவாக ஒக்ஸிஜன் கிடைக்கச் செய்வதற்காக ஒக்ஸிஜன் டேங்கர்களை ராணுவ விமானங்கள் கொண்டு செல்கின்றன.இதனால் மிக மிக விரைவாக ஒக்ஸிஜன், தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க இந்திய பிரதமர் மோடி மாநில அரசின் முதல்வர்களுடன் தொடர்ச்சியாக பேசி வருகிறார்.மேலும் இதை சரி செய்வதற்காக கூட்டாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேநேரம் தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்தால் தினமும் 1000 மெட்ரிக் டன் ஒக்ஸிஜன் இலவசமாக வழங்குவதாக வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இதற்கு இந்திய மத்திய அரசு ஒப்புதல் தெரிவிக்க தமிழக அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்தது .

இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் அடுத்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது தூத்துக்குடி மக்களின் கருத்துக்களை ஆட்சியரின் மூலம் சேகரித்து நீதிமன்றத்தில் பதிவு செய்வதாக தெரிவித்திருக்கிறது.

ஒக்ஸிஜனை வைத்து அரசியல் செய்யும் வேதாந்தா காப்பீட்டு நிறுவனம் ஒருபுறமென்றால், ஒக்ஸிஜனை அதிக அளவில் உற்பத்தி செய்து வழங்கும் மாநிலமாக கேரளா இருக்கிறது.

தமிழ்நாட்டிற்கு 72மெட்ரிக் டன், கோவாவிற்கு 19 மெட்ரிக் டன், கர்நாடகாவிற்கு 36 மெட்ரிக் டன் என கேரள அரசு வழங்கியுள்ளது.

இதேபோல, இந்தியா எதிர்கொள்ளும் இந்த கொரோனா சவாலை முறியடிக்க உலக நாடுகளும் உதவ முன்வந்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய தலைவர் சார்லஸ் மைக்கல், கொரோனா தொற்றுக்கு எதிரான சவாலை சந்திக்கும் இந்திய மக்களுடன் ஐரோப்பிய ஒன்றியம் துணை நிற்கும் என்று கூறினார்

இதைப்போலவே ரெம்டெசிவிர், ஒக்ஸிஜன், கொள்கலன்கள் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களை தருவதற்கு அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம், ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன.

இந்திய எல்லையில் இந்திய படையோடு சிக்கலை ஏற்படுத்தி வரும் சீனா,மருத்துவ பொருட்களின் பற்றாக்குறையில் இருக்கும் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக கூறியுள்ளது.

எது எப்படி இருப்பினும் இந்த கொரோனா இரண்டாவது அலையை சமாளிப்பதில், இந்தியாவிற்கு உள்ளும், இந்தியாவிற்கு வெளியிலிருந்தும் மனிதநேய அடிப்படையில் உதவிகள் வந்த வண்ணம் இருப்பது மட்டுமே தற்சமயம் ஆறுதலான ஒரே விடயம்.