May 15, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈராக்கில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 82 பேர் பலி

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 82 பேர் பலியானதுடன், 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பாக்தாத்தில் அமைந்துள்ள “இப்னு காதிப்” மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு ஒக்ஸிஜன் வெண்டிலேட்டர் வெடித்ததன் காரணமாக இந்த தீ விபத்து இடம் பெற்றுள்ளது.

ஆரம்பத்தில் 30 க்கும் குறைவானவர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், 82 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றுள்ள இந்த விபத்தின் போது, 30 கொரோனா நோயாளர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்துள்ளனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மருத்துவமனையின் அனைத்து நோயாளிகளும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

https://twitter.com/thestevennabil/status/1386254017676779522?s=20

 

இந்த “துயர விபத்து” தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு ஈராக்கின் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி அதிகாரிகளை பணித்துள்ளார்.

இதனிடையே இந்த சம்பவம் “கோவிட் -19 நோயாளிகளுக்கு எதிரான குற்றம்” என ஈராக்கின் மனித உரிமை ஆணையம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

ஈராக்கில் பெப்ரவரி மாதம் முதல் கோவிட் நோய்த்தொற்று அதிகரித்து வருகின்றது.தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து இதுவரை அங்கு 1,025,288 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், 15,217 பேர் உயிரிழந்துள்ளனர்.