May 15, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்களுக்கு திறக்கலாம் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிவிப்பு

ஒக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்களுக்கு திறக்கலாம் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதற்கமைய அனைத்து கட்சி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறி நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஒக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தேவையான ஒக்ஸிஜனை இலவசமாக தயாரித்து தருவதாக வேதாந்தா நிறுவனம் கூறியது.

இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இதுகுறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி  முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தின் போது, 4 மாதங்களுக்கு ஒக்ஸிஜன்  உற்பத்திக்கு மட்டும் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

அத்தோடு ஸ்டெர்லைட் வளாகத்தில் உள்ள ஒக்ஸிஜன் உற்பத்தி பிரிவை மட்டுமே திறக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளதுடன், ஸ்டெர்லைட் ஆலையில் இடம்பெறும் ஒக்ஸிஜன் உற்பத்தி நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு கண்காணிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

நாளொன்றுக்கு 1050 டன் ஒக்ஸிஜன் உற்பத்தி செய்து மருத்துவ பயன்பாட்டுக்கு தருவதாக வேதாந்தா நிறுவனம் வாக்குறுதியளித்துள்ளது.

மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் ஒக்ஸிஜன் உற்பத்தி செய்தால் அது தமிழ்நாட்டின் தேவைக்கு பயன்படுத்தப்படும் எனவும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒக்ஸிஜன் மாநிலத்தின் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.