January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

9/11 தாக்குதலின் 20 வருட நினைவு தினமும் ஜோ பைடன் எதிர்நோக்கியுள்ள சவால்களும்

அமெரிக்க உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு 20 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.

2001 ஆம் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி அல்கைதா பயங்கரவாத அமைப்பு மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 2977 பேர் உயிரிழந்ததோடு, 6000 க்கு அதிகமானோர் காயங்களுக்கு உள்ளாகினர்.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அல்கைதா அமைப்பினர் அமெரிக்காவின் நான்கு பயணிகள் விமானங்களைக் கடத்தி, அதில் இரண்டைக் கொண்டு இரட்டைக் கோபுரம் மீது தாக்குதல் நடத்தினர்.

தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அல்கைதா அமைப்பின் ஒசாமா பின் லாடன் பெயிரிடப்பட்டதோடு, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை 2001 ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது.

9/11 தாக்குதலுக்கு 10 வருடங்கள் ஆகும் போது, பாகிஸ்தானின் அப்பூதாபாத் நகரில் அமெரிக்க படைகள் மேற்கொண்ட வான் தாக்குதலில் ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டார்.

இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு 20 வருடங்கள் ஆகும் போது, அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதாக பென்டகன் அறிவித்திருந்தது.

அதற்கமைய, 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற ஜனாதிபதி ஜோ பைடன் நடவடிக்கை எடுத்தார்.

அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியுள்ளனர். இதனால், ஆப்கானில் இருந்து வெளியேறிய அமெரிக்காவின் நடவடிக்கை இன்றளவில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

அத்தோடு, செப்டம்பர் 11 தாக்குதலின் 20 ஆவது நினைவு தின நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டாமென குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தாக்குதல் தொடர்பான ஆவணங்களோ, சரியான தகவல்களோ வெளியிடப்படாத நிலை 20 வருடங்களாக தொடர்கிறது.

குறித்த ஆவணங்களை வெளியிடுவதாக ஜோ பைடன் தேர்தல் பிரசாரங்களில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், சவூதி அரேபிய அதிகாரிகள் 9/11 தாக்குதல் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆவணங்களை வெளியிடுமாறு 1800 க்கும் மேற்பட்ட உறவினர்கள் கையொப்பமிட்டு பைடனுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி குறித்த ஆவணங்களை வெளியிட மறுத்தால், செப்டம்பர் 11 தாக்குதலின் 20 ஆவது நினைவு நிகழ்வுகளிலும் பங்கேற்கக் கூடாது என்று பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பில் சவூதி அரேபிய அதிகாரிகள் முன்னதாகவே அறிந்திருந்ததாகவும், தாக்குதலைத் தடுப்பதற்கு அவர்கள் எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

20 வருட நினைவு தினத்தை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், அமெரிக்கர்கள் ஒற்றுமையாக ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

9/11 தாக்குதலில் உயிரிழந்த 2,977 பேருக்கும் அஞ்சலி செலுத்திய ஜோ பைடன், பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கப் போராடிய அனைவருக்கும் மரியாதை செய்துள்ளார்.

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் 20 வருட அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

9/11 தாக்குதலின் முழுமையான தகவல்களை வெளியிடப்படவில்லை என்ற பாதிக்கப்பட்டவர்களின் உறவுகளின் குற்றச்சாட்டு, ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் எழுச்சி என்பதோடு ஆப்கான் யுத்தத்துக்காக செலவழித்ததில், 6 டிரில்லியன் டொலர்கள் வரை கடன் சுமைக்குள் தள்ளப்பட்டுள்ள அமெரிக்காவை மீட்டு, ஒருமைப்படுத்துவதே ஜோ பைடன் முன்னுள்ள சவாலாகும்.