May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தில் மீண்டும் உயரும் கொரோனா: பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதுடன் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,631 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 25 பேர் இன்று (11) உயிரிழந்த நிலையில், தற்போது 16,304 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் வீட்டிலிருந்தவாறே குடும்பத்தினருடன் திருவிழாவைக் கொண்டாட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தியுள்ளார்.

அத்தோடு நாடு முழுவதும் 65 மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘இவற்றில், 35 மாவட்டங்களில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக தொற்று இருப்பதாக கூறப்படுகிறது.

இதுதவிர, 38 மாவட்டங்களில் தினமும் 100க்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, வாராந்த தொற்று வீதம் ஐந்துக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே மாவட்டத்தின் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக கருத முடியும்.

இந்த விகிதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக கேரளா, இமாச்சல பிரதேசம், வடகிழக்கு மாநில மாவட்டங்களில் நீடிக்கிறது.

கேரளாவில் தற்போது 2.40 இலட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மகாராஷ்டிராவில் 51,419 நோயாளிகளும், கர்நாடகாவில் 17,085 பேரும், தமிழகத்தில் 16,180 பேரும், ஆந்திராவில் 14,510 பேரும் உள்ளனர்.

தேசிய அளவில் கிட்டதிட்ட 30 மாநிலங்களில் தலா 10,000க்கும் குறைவான மக்களே சிகிச்சையில் உள்ளதாக’ மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்திருக்கிறார்.