January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரிட்டனின் கொரோனா ‘சிவப்புப் பட்டியலில்’ இந்தியா

இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதையடுத்து இந்திய தலைநகரில் ஒரு வாரத்திற்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரிட்டனின் “சிவப்பு பட்டியலில்” இந்தியா சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சின் செயலாளர் மாட் ஹான்காக் அறிவித்துள்ளார்.

வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் அமுலுக்கு வரவுள்ள கட்டுப்பாடுகளின் படி, கடந்த 10 நாட்களில் இந்தியாவில் இருந்து பயணித்தவர்களில் பெரும்பாலானவர்கள் பிரிட்டனுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

பிரிட்டிஷ் அல்லது ஐரிஸ் கடவுச்சீட்டு வைத்திருப்போரும் பிரிட்டனில் வதிவிட உரிமை உள்ளோரும் அரசு அனுமதித்துள்ள ஹோட்டல் ஒன்றில் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டதன் பின்னர் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

புதிய கொரோனா வைரஸ் தொற்று பரவலின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு, ஒரு முன்னெச்சரிக்கை அடிப்படையில், இந்தியாவைச் சிவப்பு பட்டியலில் சேர்க்கும் கடினமான ஆனால் முக்கியமான முடிவை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக் கூறியுள்ளார்.

உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது. அங்கு இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் 2,73,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,50,61,919 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான 1,619 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,78,769 ஆக உயர்ந்துள்ளது.