May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறிய ஹெலிகொப்டரை செவ்வாய்க் கிரகத்தில் பறக்கச் செய்து நாசா வரலாறு படைத்தது

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா செவ்வாய்க் கிரகத்தில் சிறிய ஹெலிகொப்டரை வெற்றிகரமாக  பறக்கவைத்துள்ளது.

‘இன்ஜனிடி’ என அழைக்கப்படும் இந்த ‘ட்ரோன்’ ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரம் செவ்வாய்க் கிரகத்தில் பறக்கச் செய்யப்பட்டது.

வேற்று கிரகத்தில் ‘ட்ரோன்’  இயக்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இது என்பதால் இந்த நிகழ்வை விண்வெளியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக விஞ்ஞானிகள் பார்க்கின்றார்.

‘ட்ரோன்’ இயக்கப்பட்டதற்கான உறுதிப்படுத்தல் செவ்வாய்க் கிரகத்திலிருந்து செயற்கைக்கோள் வழியாகப் பூமிக்கு அனுப்பப்பட்டது.

இது குறித்த காணொளிகளையும் நாசா பகிர்ந்து கொண்டுள்ளது.

இன்னும் அதிகமான நேரம் ட்ரோன்களை இயக்குவதற்கான முயற்சியில் பொறியியலாளர்கள் தொழில்நுட்பத்தை விருத்தி செய்வது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்.

 

“செவ்வாய்க் கிரகத்தில் எங்கள் ரைட் சகோதரர்களின் தருணத்தைப் பற்றி நாங்கள் இவ்வளவு காலமாகப் பேசிக்கொண்டிருக்கிறோம்.இங்கே அது நடந்துள்ளது” என இந்த வியத்தகு தருணம் குறித்து பசடேனாவில் உள்ள நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் திட்ட மேலாளர் மிமி ஆங், தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பூமியில் உள்ள வளியின் அடர்த்தியில் 1 வீதம் தான் செவ்வாய்க் கிரகத்தின் வளிமண்டலத்தின் அடர்த்தி. அங்கு வளிமண்டலம் மிகவும் மெல்லியதாக உள்ள நிலையில் ட்ரோன்களை இயக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

இந்த முயற்சியானது கிரகங்களை மேலும் ஆராய்வதற்கு துணையாக இருக்கும் என நாசா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.