November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சவூதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தொழிலாளர்கள் அனைவரும் நாடு திரும்பினர்!

(Photo : facebook /Bandaranaike International Airport)

சவூதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புலம்பெயர்ந்த இலங்கை தொழிலாளர்களின் கடைசி தொகுதியினர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ரியாத் மற்றும் ஜெத்தாவில் உள்ள தடுப்பு காவல் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 103 இலங்கையர்களே இன்று (புதன்கிழமை ) சவூதி எயார்லைன்ஸ் எஸ்.வி. 786 என்ற விமானத்தில் இலங்கை வர உள்ளனர்.

சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள தடுப்பு முகாம்களில் 40 ற்கும் மேற்பட்ட இலங்கைப் பணிப்பெண்கள் நீண்ட காலமாக  தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ‘அம்னெஸ்டி இண்டர்நெஷனல்’ அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து ரியாத் மற்றும் ஜெத்தாவில் உள்ள தடுப்பு காவல் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களை நாட்டிற்கு மீள அழைத்து வரும் பணியை 2021 ஏப்ரல் மாதத்தில்  இலங்கை தூதரகம் ஆரம்பித்தது.

இந்த காலப்பகுதியில் 49 பெண்கள் மற்றும் 131 ஆண்கள் உள்ளடங்கலாக மொத்தம் 180 நபர்கள் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அத்தோடு மொத்தமாக 2020 ஜூலை முதல், சவூதி அரேபியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட நிலையில்  தடுப்பு முகாம்களில் இருந்த  334 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இதையடுத்து ரியாத் மற்றும் ஜெத்தாவில் உள்ள முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வருவதற்கான வேலைத்திட்டம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு நாடு கடத்தல் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களை நாட்டிற்கு மீள அழைத்து வரும் செயன்முறையானது ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஜெத்தாவில் உள்ள துணைத் தூதரகம் ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.