April 29, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”சவூதி அரேபியாவின் தடுப்பு முகாம்களில் இலங்கைப் பணிப் பெண்கள் பலர் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்”

சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள தடுப்பு முகாம்களில் 40 ற்கும் மேற்பட்ட இலங்கைப் பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ‘அம்னெஸ்டி இண்டர்நெஷனல்’ தெரிவித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டுப் பணியாளர்களாக சவூதி அரேபியாவுக்கு சென்றவர்கள் எனவும், எந்த குற்றங்களும் செய்யாத போதும் இவர்கள் கட்டாயத் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களிடையே 8 முதல் 18 மாதங்கள் வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களும் இருக்கின்றார்கள் என்றும் அம்னெஸ்டி இண்டர்நெஷனல் அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் மூன்று சிறுவர்களும், தீவிர சிகிச்கை தேவைப்படும் ஒரு பெண்ணும் அடங்குவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் தமது சொந்த நாட்டிற்குத் திரும்பும் தினத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

தாம் பணிபுரிந்த இடங்களில் எஜமானர்களின் மோசமான நடத்தை காரணமாக பலர் பணி இடங்களை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அவர்கள் தமது நாட்டுக்கு திரும்புவதற்கு தேவையான ஆவணங்களை இழந்துள்ளதாகவும் சிலர் பணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாவும் அம்னெஸ்டி இண்டர்நெஷனல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து அறிவிக்கப்படவில்லை எனவும், அவர்கள் சட்டரீதியான தீர்வினை அணுகுவதற்குத் தூதரகத்தின் உதவியைப் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படவில்லை எனவும் அம்னெஸ்டி இண்டர்நெஷனல் சுட்டிக்காட்டியுள்ளது.

“தவறான முகவர்கள் ஊடாக தமது குடும்பங்களைப் பிரிந்து தொழிலுக்காகச் சென்ற இவர்கள் இவ்வாறு காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் அம்னெஸ்டி இண்டர்நெஷனல் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளர் மங்கள ரண்தெனிய, அவர்களை நாட்டுக்கு அழைத்துவரத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது முன்னெடுத்துள்ளதாக கூறியுள்ளார்.