பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்ட ஏழு பேர் மீதான வழக்கு விசாரணையை கல்முனை நீதவான் நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்ட ஏழு பேரையும் இன்றையதினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
பெப்ரவரி 3 ஆம் திகதி இடம்பெற்ற பேரணியில் கலந்து கொள்ளக்கூடாது என கல்முனை பொலிஸ் நிலையத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 29 பேருக்கு கல்முனை நீதிமன்ற உத்தரவின் பேரில் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.
எனினும் நீதிமன்ற தடை உத்தரவினை மீறி கலந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எழுவருக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்கொன்று பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வழக்கினை கல்முனை நீதவான் நீதிமன்றம் தொடர்ந்து நடாத்தவும் அதன் மீது கட்டளை பிறப்பிக்கவும் மே 18 ஆம் திகதி வரை மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்றைய தினம் இடைக்கால தடை விதித்தது.
இதன்படி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணை செய்யும் நியாயாதிக்கம் நீதவான் நீதிமன்றிற்கு கிடையாது ஆகவே கல்முனை நீதவான் நீதிமன்றில்முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணையை இடைநிறுத்தக்கோரி முன் வைக்கப்பட்ட சமர்ப்பணத்தை ஏற்ற நீதிமன்றம் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விசாரணையை இடைநிறுத்த தீர்மானித்தது.
அத்தோடு பிரதிவாதிகளுக்கு அறிவித்தலை வழங்குமாறும் மேன் முறையீட்டு நீதிமன்ற பதிவாளர் கல்முனை நீதவான் நீதிமன்றின் பதிவாளருக்கு இந்த கட்டளையை தொலை நகல் மூலமும் அனுப்பி வைக்குமாறும் கட்டளையிடப்பட்டது.
இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோரும் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர்.