May 15, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் இணைய வழியில் மே தின கூட்டங்களை நடத்துவது குறித்து அரசியல் கட்சிகள் ஆராய்வு

Photo: JVP facebook

நாட்டில் கொவிட்-19 வைரஸ் தொற்று பரவியதால் இந்த ஆண்டு மே தின பேரணிகளையும், ஆர்ப்பாட்டங்களையும் ரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், பல அரசியல் கட்சிகள் மே தின கொண்டாட்டங்களை இணைய வழியாக நடத்துவதில் கவனம் செலுத்தியுள்ளன.

இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தனியார் வானொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,

கொரோனா வைரஸுக்கு மத்தியில் சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றி சர்வதேச மே தினத்தை இணைய வழியாக நடத்துவதற்கு நாங்கள் அவதானம் செலுத்தியுள்ளோம். இது இலங்கைக்கு மாத்திரமல்ல, வேலை செய்கின்ற உலக மக்கள் அனைவரினதும் தினமாகும். எனவே வேலை செய்கின்ற மக்களின் தினத்தை கொண்டாடுவது எமது முக்கிய பொறுப்பாகும்.

எனவே இணைய வழியாக இம்முறை மே தினத்தை கொண்டாடுவதற்கு மக்கள் விடுதலை முன்னணி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் லங்கா சம சமாஜ கட்சியும் மே தின கொண்டாட்டத்தை இணைய வழியாக நடத்துவதற்கு முடிவு செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, கொவிட்-19 வைரஸ் தொற்று நோயை எதிர்கொண்டு சர்வதேச தொழிலாளர் தின கொண்டாட்டங்களை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து அடுத்த சில நாட்களில் தமது கட்சி முடிவெடுக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.

இது இவ்வாறிருக்க, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம், டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் மூலம் மே தினத்தை கொண்டாடலாமா என்பது குறித்து தமது கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறினார்.