இலங்கையில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பல நாடுகளும் தமது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இலங்கைக்கான புதிய பயண வழிகாட்டல்களை வழங்கியுள்ளன.
இலங்கையில் கொரோனா பரவல் 3 ஆம் கட்ட ஆபத்தை அடைந்துள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் அபாயம் அதிகரித்திருப்பதால் குறுகிய அறிவிப்பில் விமான போக்குவரத்து நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பிரிட்டன் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம் என அவுஸ்திரேலியா அதன் பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் புதிய வகை கொரோனா பரவுவதாக அமெரிக்க தொற்று நோய் கட்டுப்பாட்டு நிலையம் அதன் பயணிகளுக்கு அறிவித்துள்ளது.
இதேநேரம், சவூதி அரேபியாவும் இலங்கைக்கு பயணிப்பதை தடை செய்துள்ளது.