May 16, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை உள்ளிட்ட 7 நாடுகள் பிரிட்டனின் சிவப்பு பட்டியலில் சேர்ப்பு!

கொவிட் அச்சுறுத்தல் அதிகளவில் உள்ள இலங்கை உள்ளிட்ட 7 நாடுகளை பிரிட்டன் தனது பயணக் கட்டுப்பாடுகள் தொடர்பான சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.

பயணக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவித்தலை ஜுன் 3 ஆம் திகதி புதுப்பித்துள்ள பிரிட்டனின் போக்குவரத்துத் திணைக்களம்,  பச்சை, செம்மஞ்சள் மற்றும் சிவப்பு பட்டியல்களின் இருக்கும் நாடுகள் தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி இலங்கை, பஹ்ரைன், எகிப்து, ஆப்கானிஸ்தான், சூடான், கோஸ்ட்டா ரிக்கா, டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு ஆகிய நாடுகளை சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஜூன் 8 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் குறித்த நாடுகள் சிவப்பு பட்டியலில் இருக்கும் என்று பிரிட்டனின் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் பிரகாரம், சிவப்பு பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் இருந்து பிரிட்டன் வருபவர்கள் 11 நாட்களுக்கு ஹோட்டல்களில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிவப்பு பட்டியலில் உள்ள எந்த நாட்டிற்கும் செல்ல வேண்டாம் என்று பிரிட்டன் தனது பிரஜைகளுக்கு அறிவித்துள்ளது.

பிரிட்டனின் சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளைச் சேர்ந்த பயணிகள், தடுப்பூசி ஏற்றியிருந்தாலும் பிரிடடனுக்குள் நுழைவதற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பச்சைப் பட்டியலில் இருந்த போர்த்துக்கல் செம்மஞ்சள் நிறப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி எந்தவொரு நாடும் தனிமைப்படுத்தல் இல்லாத பச்சைப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.