May 16, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா பரவல்; “பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியது அவசியம்” ;அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

கொரோனா

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த  பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியது அவசியம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வைத்தியர் நவீன் டி சொய்சா கூறினார்.

நாட்டில் தீவிரம் அடைந்துவரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள திட்டங்களில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் மூலம் கொரோனா பரவல் குறித்த மக்களின் அணுகுமுறைகளை மாற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது நாட்டில் உள்ள நிலைமையை நிர்வகிக்க முடியும். ஆனால் இந்த நிலைமை மோசமடைந்தால் கட்டுப்படுத்த முடியாது போகலாம்.அதிக இழப்புகளைச் சந்திக்க நேரும் எனவும் வைத்தியர் நவீன் டி சொய்சா எச்சரிக்கை விடுத்தார்.

எனவே தற்போது பொது மக்களிடையே பயண ஒழுங்குமுறைகளை உருவாக்குவதன் மூலம், தொற்று நோய் மேலும் பரவாமல் தடுக்க வழி வகுக்கும் என்றார்.

அத்துடன் நாட்டில் தோன்றியுள்ள கொரோனா நெருக்கடி நிலைமையைக் கொண்டு அரசியல் கட்சிகள் அரசியல் இலாபம் ஈட்ட முயற்சிக்க கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதாரத் துறையை தானாக இயங்குவதற்கு அனுமதிக்கும்படி, எதிர்க்கட்சியை கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.