May 10, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திருச்சி சிறையில் இலங்கை தமிழர்கள் 16 பேர் தற்கொலை முயற்சி!

தமிழ்நாட்டின் திருச்சி மத்திய சிறையின் சிறப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் 16 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்படும் வெளிநாட்டவர்களை தங்க வைப்பதற்கென சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த  சிறப்பு முகாமில் 78 இலங்கை தமிழர்கள் இருப்பதுடன் இவர்களுடன், நைஜீரியா, வங்கதேசம், சூடான் ,பல்கேரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 116 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இங்கு உள்ள இலங்கைத் தமிழர்கள் சிலரின் தண்டனை காலம் முடிந்தவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் கடந்த சில ஆண்டுகளாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

இதனையடுத்தே கடந்த ஜூலை 15ஆம் திகதி 10 இலங்கை தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி முதல் சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தங்களை உடனே விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் 8 ஆவது நாளான நேற்று 2 பேரின் உடல்நிலை மோசமானதால் வருவாய்த் துறை, காவல்துறை அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கிருந்த இலங்கை தமிழர்கள் சிலர் திடீரென தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

அதில் உமா ரமணன் என்பவர் வயிற்றிலும், அமல்ராஜ் என்பவர் கழுத்திலும் கத்தியால் கிழித்துக் கொண்டதாகவும் சிலர் மரங்களின் மீது ஏறி, கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி மிரட்டியுள்ளனர்.

இதனை அடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கத்தியால் கிழித்துக் கொண்டதில் காயமடைந்த உமாரமணன் , அமல்ராஜ் மற்றும் தூக்க மாத்திரைகளை சாப்பிட்ட நிஷாந்த், ரீகன், நிமலன், நிஷாந்த், ஸ்டீபன் உள்ளிட்ட 14 பேர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 10 மீனவர்கள் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டதாக அம்மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்திருக்கிறார்.

மேலும் கடவுச்சீட்டு வழக்குகளில் தொடர்புடைய 21 பேரை விடுதலை செய்வது தொடர்பான பரிந்துரை, தற்போது அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்த தமிழக அரசுக்கு அவசர அறிக்கை அனுப்பப்படும் எனவும், தற்கொலைக்கு முயன்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

இந்த தற்கொலை முயற்சி சம்பவங்களை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அதிக அளவிலான காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.