May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கமுடியாது’: நீதிமன்றத்தில் அறிவித்த இந்திய அரசு

யுத்த காலத்தின் போது இலங்கையிலிருந்து தமிழகம் வந்தவர்கள், சட்டவிரோதமாக குடியேறிய அகதிகள் எனவும் இதனால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது எனவும் இந்திய மத்திய அரசு தெரிவித்திருக்கிறது

தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க கோரி 2009ஆம் ஆண்டு திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பலர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் 2019 ஆம் ஆண்டு, மனுதாரர்கள் அனைவரும் குடியுரிமை கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புதிதாக விண்ணப்பிக்குமாறும், அந்த விண்ணப்பங்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் மத்திய அரசுக்கு தாமதம் இன்றி அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை முறையாக நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில் தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து இந்திய அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்றது.

அப்போது, இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனவும், அதனால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என்றும் மத்திய அரசு வாதம் செய்துள்ளது.

அதற்கு பதில் அளித்துள்ள தலைமை நீதிபதி அமர்வு , மனுவை பரிசீலித்து, குடியுரிமை வழங்குங்கள், இல்லையெனில் நிராகரியுங்கள், அதற்கு ஏன் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளீர்கள்? என மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதனைத் தொடர்ந்து ,திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தை பொறுத்தவரை தமிழக அரசின் நிலைப்பாடு மாறியுள்ளது.ஆகவே தமிழக அரசிற்கு இது குறித்து முடிவெடுக்குமாறு உத்தரவிடலாம் என தெரிவித்துள்ளார்.

அதற்கு , தமிழக அரசின் முடிவாக இருந்தாலும் அது சட்டங்களுக்கு உட்பட்டே முடிவெடுக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் .

இந்த வழக்கு குறித்து , தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 23ஆம் திகதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.