May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை அகதிகள் தமிழகத்திற்கு சட்டவிரோதமாக வரவில்லை,அவர்கள் தஞ்சம் புகுந்தவர்கள்’

இலங்கை அகதிகள் யுத்த காலத்தின் போது தமிழகத்திற்கு சட்டவிரோதமாக வரவில்லை.அவர்கள் தஞ்சம் புகுந்தவர்கள் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரி, சட்டப் பேரவையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என ராமதாஸ் அறிக்கை வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்,  தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகள் அனைவரும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடியேறியவர்கள் என்றும், அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க முடியாது என மத்திய அரசு கூறியிருப்பது மனித நேயமற்ற செயல் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மதம், இனம் ஆகியவற்றின் பெயரால் கொடுமைகளுக்கு ஆளாகி, இந்தியாவுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன் வந்தவர்களுக்குக்கு குடியுரிமை வழங்கப்படும் போது, இலங்கையிலிருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு மட்டும் அந்த உரிமை மறுக்கப்படுவது சரியல்ல என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் வாழும் ஈழத்தமிழர்கள் தங்களுக்கு இந்தியக் குடியுரிமை கோரி தொடர்ந்த வழக்கில், இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க ஆணையிட்டு தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

அதேநேரம் இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்,

இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனவும் அவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என்றும் கூறியிருப்பதை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ் மத்திய அரசின் இந்த நிலைப்பாடு தவறானது எனவும் அவர் சாடியுள்ளார்.

அத்தோடு ”இலங்கைத் தமிழ் அகதிகள் எவரும் தங்களின் சொந்த நாட்டை விட்டு சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக இந்தியாவில் குடியேறவில்லை.

அந்த உரிமையை இலங்கை தமிழர்களுக்கு மட்டும் மறுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. ஆகவே இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதுதான் சரியான முறையாகும்.

தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் அறிக்கை வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.