டெல்லி பத்ரா மருத்துவமனையில் ஒக்ஸிஜன் பற்றாக்குறையால் 8 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி முழுவதும் நாள்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகி வருகின்ற நிலையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக டெல்லி மருத்துவமனைகளில் ஒக்ஸிஜன் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இந்நிலையில், டெல்லி பத்ரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உட்பட 8 கொரோனா நோயாளிகள் பலியாகியுள்ளனர்.
இதனையடுத்து, ‘8 பேர் இறந்த பின்னரும் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது’ என மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அத்தோடு டெல்லிக்கு 490 மெட்ரிக் டன் ஒக்ஸிஜனை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் உத்தரவை மீறினால் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.