மும்பையிலிருந்து விமானம் மூலம் 3 இலட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னையை வந்தடைந்தன.
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 3 இலட்சம் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.
மேலும், கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் தமிழக மாவட்ட பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் சுனாமி போன்று கொரோனா பரவி வருவதுடன் 25 ஆயிரம் பேருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கப்படுவதாக தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி சித்திக் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், சென்னை மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் விருந்தினர்களையும், கூட்டமாக கூடுவதையும் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒக்ஸிஜன் பற்றாக்குறையை சரி செய்வதற்கான பணிகளையும் விரைவுப்படுத்தியுள்ளதாக தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.