நாட்டை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கிக்கொள்வதற்கு எந்த தவறான முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை கொவிட் தொற்றின் புதிய மாறுபாட்டு இனங்காணப்பட்டதையடுத்து பிரட்டன், ஜூன் 8 ஆம் திகதி முதல் இலங்கையை சிவப்பு பட்டியலில் இணைத்தது.
எனினும் இலங்கையில் தற்போது கொவிட் தொற்று குறைவடைந்து வருவதையடுத்து, இலங்கை செப்டம்பர் 22 முதல் பிரிட்டனின் சிவப்பு பட்டியலிலிருந்து நீக்கப்படும் என்று அந்நாட்டு அரசு சனிக்கிழமை அறிவித்தது.
இதனிடையே நாட்டில் பிசிஆர் சோதனைகளின் எண்ணிக்கையைக் குறைத்து, செயற்கையாக கொவிட் தொற்று பரவலில் வீழ்ச்சியை உருவாக்கி, சிவப்பு பட்டியலிலிருந்து நீக்க முயற்சிக்கப்பட்டுள்ளதாக சில தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பில் வெளியான செய்திகளுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதிலளித்துள்ளார்.
“கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு மட்டுமே ஒரு நாடு சிவப்பு பட்டியலிலிருந்து நீக்கப்படுவதில்லை. இதனோடு தொடர்புடைய ஏனைய அளவுகோல்கள் உள்ளன” என்று வைத்திய நிபுணர் அசேல குணவர்தன வலியுறுத்தினார்.
சமூகத்தில் தற்போது கொவிட் தொற்று பரவல் குறைவடைந்துள்ளதன் விளைவாக மருத்துவமனைகளில் சேர்க்கும் நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமா நாட்டில் கொவிட் பாதிப்பில் சரிவை அவதானிக்கமுடிவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.