January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேர்தல் முறை மாற்றமும் சிறுபான்மையின பிரதிநிதித்துவமும்

file photo: Facebook/ Election Commission of Sri Lanka

தேர்தல் என்பது ஜனநாயகத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாகும். சர்வஜன வாக்குரிமையைப் பெற்ற முதலாவது தெற்காசிய நாடும் இலங்கையே. இலங்கையில் தேர்தல் முறை சீர்திருத்தம் தொடர்பான கலந்துரையாடல்கள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.

இலங்கையில் 2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கலப்புத் தேர்தல் முறையில் தமது பிரதிநிதித்துவம் குறைவடைவதாக சிறுபான்மை இன கட்சிகள் கவலை வெளியிட்டுள்ளன. நீண்ட காலமாக பிற்போடப்பட்டு வரும் மாகாணசபைத் தேர்தலை நடத்தும் முறை தொடர்பாக ஆராய்வதற்கு அரசாங்கம் நிபுணர் குழுவொன்றையும் நியமித்துள்ளது.

ஜனநாயக நாடொன்றில் மக்களின் அரசியல் உள்வாங்கல் உறுதிப்படுத்தப்பட வேண்டும். தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள் தேசிய அளவில் தமக்கு வாக்களித்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

இந்நிலையில், தற்போதுள்ள தேர்தல் முறையில் இலங்கை முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் எவ்வாறு குறைவடையக் கூடும், அல்லது முஸ்லிம்களின் அரசியல் உள்வாங்கல் பாதிப்படையுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

அத்தோடு, புதிய தேர்தல் முறையொன்று தொடர்பாக முஸ்லிம் அரசியல் தரப்புகளின் சீர்திருத்த முன்மொழிவுகளையும் நோக்க வேண்டியுள்ளது.

இலங்கையில் அண்ணளவாக 10 வீதமான முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். நாட்டில் இதுவரை இருந்த தேர்தல் முறை காரணமாக முஸ்லிம்கள் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் அரசியல் உரிமை மிக்கவர்களாக கருதப்படுகின்றனர்.

ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் அதிகமான சந்தர்ப்பங்களில் சிறுபான்மைக் கட்சிகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை, விகிதாசார தேர்தல் முறையில் இருந்தது. இது சில சந்தர்ப்பங்களில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கவும் உதவியுள்ளது.

இலங்கையின் மலையகத்தில் சுமார் 25 மாகாணசபை உறுப்பினர்கள் இருந்ததாகவும் புதிய தேர்தல் முறையின்கீழ், ஐந்து உறுப்பினர்களைத் தான் பெறமுடியும்; என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னணி உறுப்பினர்களான செந்தில் தொண்டமான் மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கூறியுள்ளனர்.

சிறுபான்மையினரைப் பொறுத்தவரையில், தமிழர்கள் வட கிழக்கில் நிலம்சார் சமூகமாக வாழ்ந்து வருகின்றனர். மலையக மக்களும் ஒப்பீட்டளவில் மலையகத்தில் ஓரளவு நிலம்சார் சமூகமாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால், முஸ்லிம்கள் நாடு பூராகவும் சிதறி வாழ்கின்றனர். இந்நிலையில், தேர்தல் முறையில் முஸ்லிம்கள் நேரடியாகப் பாதிக்கப்படும் வாய்ப்பு காணப்படுகின்றதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையில் கட்சிகளுக்கு வழங்கப்படுகின்ற வாக்குகளுக்கு ஏற்ப ஆசனங்கள் பங்கிடப்படும். அந்த ஆசனங்களுக்கு உரிய அங்கத்தவர்களை தெரிவுசெய்வதற்கு விருப்புக்குரிய வாக்கு எனும் இன்னுமொரு வாக்கு பயன்படுத்தப்படுகின்றது. புதிய முறையில் ஒரு வாக்கு இரண்டு தொழிற்பாடுகளைப் புரிகின்றது. ஒன்று, அது கட்சிக்குரிய ஆசனங்களை தீர்மானிக்கின்ற வாக்காக செயற்படுகின்ற அதேவேளை, வெற்றிபெற்ற 50 வீதமான அங்கத்தவர்கள் யார்? என்பதையும் தீர்மானிக்கப் பயன்படுகின்றது.

இத்தேர்தல் முறை 50 வீதம் தொகுதிகளையும் 50 வீதம் பட்டியல் நியமனங்களையும் கொண்டது. இலங்கையில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லிம்கள் வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு உரிய விகிதாசாரப்படி தொகுதிகளை ஓரளவு ஏற்படுத்தலாம். அதேநேரம், முஸ்லிம்கள் கிழக்கில் செறிந்து வாழ்வதால், தொகுதிகளுள் குறைபாடுகள் இருந்தாலும் பட்டியலினூடாக அவற்றை நிவர்த்திக்கலாம். ஏனெனில், 90 வீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் கிழக்கின் முஸ்லிம் பெரும்பான்மை தொகுதிகளுக்குள் உள்வாங்கப்பட்டுவிடுவார்கள். எனவே, அவர்கள் அளிக்கின்ற வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசனங்கள் பங்கிடப்படுகின்றபோது, அங்கு பெரிய பாதிப்பு ஏற்படாது.

கிழக்கிற்கு வெளியே வாழ்கின்ற மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்கள் சிதறி வாழ்கின்றனர். அவ்வாறு சிதறி வாழ்வதால் அவர்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப நிச்சயமாக தொகுதிகளை ஏற்படுத்த முடியாது. முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களில் ஓரளவு தொகுதிகளை உருவாக்கலாம்.

புதிய கலப்புத் தேர்தல் முறையின் கீழ் நடத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டு பிரதேச சபை தேர்தலில் சிறுபான்மை முஸ்லிம் அல்லது தமிழ் கட்சிகளின் பிரதிநிதித்துவம் தொடர்பாக பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி இரா. ரமேஷ் கருத்து தெரிவிக்கும் போது,

“2018 ஆம் ஆண்டு பிரதேச சபை தேர்தல் வட்டாரங்கள் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டதால், சிறுபான்மை அல்லது முஸ்லிம், தமிழ் கட்சிகளின் பிரதிநிதித்துவம் குறையவில்லை என்றே கூற வேண்டும். குறித்த தேர்தல் 1500 முதல் 7000 பேர் வரையான சிறிய சிறிய வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டே, நடைபெற்றது. குறித்த தேர்தலில் சிறுபான்மை மக்கள் சபைகளைக் கைப்பற்றி, தவிசாளர் பதவிகளையும் பெற்றிருந்தனர்.

எனினும், மாகாணசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் தொகுதிகள் வேறுபடுகின்றன. அவை 90 ஆயிரம் பேருக்கு ஒரு தேர்தல் தொகுதி என்ற வகையில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

மாகாணசபை முறைக்கும் 50:50 என்ற முறை அறிமுகப்படுத்தப்படும் என்றால், 50 ஆயிரம் பேருக்கு ஒரு தொகுதி என்ற விதத்தில் எல்லைகள் பிரிக்கப்படலாம். இந்நிலையில், ஒரு தொகுதிக்கு ஆகக் குறைந்தது 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையான சிறுபான்மை மக்களாவது இருந்தால் தான், தமது பிரதிநிதித்துவத்துக்காக போராடலாம். அவ்வாறான நிலைமை இல்லாத போது, பிரதிநிதித்துவத்தை இழப்பதற்கான வாய்ப்புகளே கூடுதலாகக் காணப்படுகின்றன.

மாகாண சபைத் தேர்தலுக்கு 50: 50 கலப்புத் தேர்தல் முறை பாராளுமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டதால், இந்த அரசாங்கம் 50: 50 கலப்பு முறைக்குச் செல்வது சந்தேகமே.

இன்று தொகுதிவரியாக 70 வீதம் மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவத்தில் 30 வீதம் குறித்தும் அதிகமான பெரும்பான்மைக் கட்சிகள் கவனம் செலுத்துவதைக் காண்கிறோம். இதன் மூலம் சிதறி வாழும் தமிழ் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும்.”

இலங்கையில் உள்ள பிரதான முஸ்லிம் அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி உட்பட சிறுபான்மை அரசியல் கட்சிகளுடன் இணைந்து தேர்தல் முறை சீர்திருத்தம் தொடர்பாக ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளது.

இதுதொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் குறிப்பிடும் போது,

“தேர்தல் முறை சீர்திருத்தம் தொடர்பாக அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளும் நிலையில், சிறு கட்சிகளும் சிறுபான்மைக் கட்சிகளும் ஒரு நிலைப்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த தேர்தல் முறை சீர்திருத்தத்தில் நாட்டில் உள்ள சகல மக்களுக்கும், தமது வாக்குகளுக்குரிய சம பெறுமானம் கிடைக்க வேண்டும்.

மக்களின் விருப்பு- வெறுப்புக்களை சரியாகப் பிரதிபலிக்கும் தேர்தல் முறையொன்றை சிறுபான்மைக் கட்சிகள் கோரவுள்ளன.

ஆரம்பமாக இலங்கையில் இருந்த தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறை மற்றும் கலப்பு முறை என்பன தோல்வியடைந்த முறைகளாகும். இப்போது நாட்டில் உள்ள விகிதாசார தேர்தல் முறையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, மக்களின் வாக்குகளுக்கு சம பெறுமானம் வழங்கும் தேர்தல் முறையொன்றையே நாம் கேட்கிறோம்.”

முஸ்லிம்களை அரசியல் ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகளில் ஒன்றான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஸ்தாப செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட், தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக ஆராயும் குழுவுக்கு பிரத்தியேகமான முன்மொழிவொன்றைச் சமர்ப்பித்துள்ளார்.

“இலங்கை முஸ்லிம்களைப் பாதிக்காத மாற்றுத் தீர்வு இரட்டை வாக்கு முறையாகும். உலகில் கலப்புத் தேர்தல் முறை உள்ள ஜேர்மனி, நியூசிலாந்து போன்ற நாடுகளிலெல்லாம் இரட்டை வாக்கு முறை தான் அமுலில் இருக்கிறது. இங்கு கட்சிக்கு வேறாக வாக்களிக்கப்படுகின்றது. தொகுதி வேட்பாளருக்கு வேறாக வாக்களிக்கப்படுகின்றது.

உதாரணமாக, குருநாகல் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால், முஸ்லிம்கள் சிறுபான்மையாக இருக்கின்ற தொகுதிகளில் வேட்பாளருக்குரிய வாக்கை தேசிய கட்சிகளில் போட்டியிடுகின்ற பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளருக்கு அளிப்பார்கள். அதன்மூலம் அந்த வேட்பாளரை அல்லது சமூகத்தை பகைத்துக்கொள்வதை தவிர்ப்பது மாத்திரமல்லாமல், நாளை ஒரு தேவை வருகின்றபோது அங்கு தெரிவுசெய்யப்படுகின்ற அங்கத்தவரின் உதவியையும் மக்களால் பெற்றுக்கொள்ள முடியும்.

கட்சிக்குரிய வாக்கை ஒரு முஸ்லிம் கட்சிக்கு அளிப்பதன் மூலம் மாவட்ட விகிதாசாரத்தின் கீழ் முஸ்லிம் உறுப்பினர்களையும் பெற்றுக்கொள்ள முடியும். அதேநேரம், கட்சி வாக்கினைப் பெற்றுக்கொள்வதற்காக தேசிய கட்சிகள் முஸ்லிம் கட்சிகளுடன் கூட்டிணைந்து பட்டியலில் அங்கத்தவர்களை நியமிப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

அல்லது அவர்கள் தமது கட்சி சொந்தமாக முஸ்லிம்களை பட்டியல் மூலம் நியமிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். முஸ்லிம் கட்சிகளின் ஊடாகவோ, தேசிய கட்சிகளின் ஊடாகவோ முஸ்லிம்கள் தங்களது உறுப்பினர்களை ஓரளவு உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

ஒரு வாக்கு என்று வருகின்றபோது, முஸ்லிம்கள் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த வேட்பாளருக்கு வாக்களிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை புரிந்துகொள்வதன் காரணமாக, தேசிய கட்சிகள் முஸ்லிம் கட்சிகளுடன் கூட்டிணைய வேண்டிய தேவையும் இல்லை. அல்லது தாமாக தமது பட்டியலில் இருந்து நியமிக்கவேண்டிய நிர்ப்பந்தமும் இல்லை.”

தேர்தல் முறையொன்றை உருவாக்குவது அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் பணியொன்று அல்ல என்றும் தேர்தல் முறையில் நிபுணத்துவம் மற்றும் அரசியலமைப்பு தொடர்பான நிபுணத்துவம் உள்ளவர்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் மலையக சிவில் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இலங்கை கலப்புத் தேர்தல் முறையைக் கொண்டுவருவதானால், ஜெர்மனி அல்லது நியூசிலாந்தில் உள்ள தேர்தல் முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் பாராளுமன்ற தெரிவுக்குழுவைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

நியூசிலாந்தில் மஹோரி என்ற இனத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு 60:40 என்ற கலப்புத் தேர்தல் முறை பின்பற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, சில நாடுகளில் சிறுபான்மைக் குழுக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய ஒதுக்கீட்டுக் கொள்கைகளும் பின்பற்றப்படுகின்றன. அதற்கு உதாரணமாக, இந்தியாவின் தலித் மக்களுக்கான ஒதுக்கீடுகளைக் குறிப்பிடலாம்.

உலக நாடுகளின் தேர்தல் முறைகளில் சிறுபான்மை மக்கள் அல்லது இனக் குழுக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த பின்பற்றப்படும் தேர்தல் முறைகள் குறித்து இலங்கையின் முஸ்லிம்- தமிழ் அரசியல் தலைமைகள் தெளிவுபெற வேண்டும். அதனைப் பரிந்துரைப்பதன் மூலம் தமது அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

கட்டுரை: ஆதில் அலி சப்ரி