இந்தியாவிடம் இருந்து மேலும் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை பரிமாற்ற முறையின் கீழ் பெற திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
டொலர் தட்டுப்பாடு காரணமாக பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ள இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த கடன் வசதி பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.
இந்தியாவிடம் இருந்து ஏற்கனவே 500 மில்லியன் டொலர்கள் பரிமாற்ற முறையின் கீழ் கடன் பெற்றுக் கொண்டுள்ள நிலையில் கூடுதலாக இந்த நிதி எதிர்பார்க்கப்படுகிறது.
1.4 பில்லியன் டொலர் மாற்று விகிதத்திற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்தவுடன் அதன் விதிமுறைகள் அறிவிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் கூறினார்.
அந்நிய செலாவணி அனுப்புதலை ஊக்குவிக்கும் வகையில் ஒரு டொலருக்கு மேலதிகமாக 10 ரூபாவை வழங்கவும் மத்திய வங்கி அண்மையில் தீர்மானித்துள்ளது.
இதேவேளை, சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை மாற்றுபவர்களுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்க எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.