May 24, 2025 16:22:18

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நவம்பரில் அனைத்து பாடசாலைகளையும் திறக்க அரசாங்கம் திட்டம்!

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாத தொடக்கத்தில் அனைத்து பாடசாலைகளையும் மீண்டும் திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாகக் கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நான்கு கட்டங்களாக பாடசாலைகள் திறக்கபடவுள்ள நிலையில், அதன் முதல் கட்டமாக 200 மாணவர்களுக்கும் குறைவான ஆரம்பப் பிரிவு பாடசாலைகள் ஒக்டோபர் 21 ம் திகதி ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயர்தர பரீட்சை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்பி ஹேஷ விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர், உயர்தர பரீட்சை வினாத் தாள்களின் தற்போதைய அமைப்பு மாற்றப்படாது எனவும் கூறியுள்ளார்.

எனினும் மாணவர்களுக்குப் பாடத்திட்டத்தைப் பூர்த்தி செய்வதற்கும் பரீட்சைக்கு தயாராவதற்கும் தேவையான கால அவகாசம் வழங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

உயர்தர மாணவர்களின் பாடத்திட்டம் எந்த அளவிற்குப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்பதை அறியக் கல்வி அமைச்சு மாகாண அளவில் விவரங்களை சேகரித்து வருவதாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.