January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்புத் துறைமுகத்தில் 2 மாதங்களாக சிக்கியிருக்கும் 12,000 டொன் சீனி!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு இரண்டு மாதங்களாக கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 600 சீனி கொள்கலன்களை கொள்வனவு செய்து சதொச விற்பனை நிலையம் ஊடாக மலிவு விலையில் வியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தனியாரினால் இறக்குமதி செய்யப்பட்ட இந்த 600 சீனி கொள்கலன்கள் கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு காரணங்களால் கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது.

இவற்றில், 433 கொள்கலன்கள் ஒன்பது இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் சுமார் 12,000 மெட்ரிக் டொன் சீனி அடங்கியுள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

600 சீனி கொள்கலன்களில் உரிமம் இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்ட 130 சீனி கொள்கலன்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் இந்த 130 சீனி கொள்கலன்களும் மியான்மருக்கு அனுப்பப்பட்டு அந்த நாட்டின் பிரச்சனை காரணமாக கொழும்பு துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் இந்த 130 சீனி கொள்கலன்களையும் நாட்டுக்குள் கொண்டு வர அனுமதிக்காததால், அவற்றை மீண்டும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

வணிக வங்கிகள் வழங்கிய கடன் பத்திரங்களை பயன்படுத்தி இறக்குமதி உரிமங்களின் கீழ் இந்தியாவில் இருந்து இந்த சீனி கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக இறக்குமதியாளர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு இரண்டு மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 433 கொள்கலன் சீனிக்கு இறக்குமதியாளர்கள் கிலோ ஒன்றுக்கு தாமதக் கட்டணமாக ரூ. 20 முதல் ரூ. 25 வரை செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் கவலை வெளியிட்டிருந்தனர்.

எனினும் இறக்குமதியாளர்களை இந்த சிக்கலிலிருந்து விடுவிக்க அரசாங்கம் முன்வந்துள்ளது.

இதன்படி லங்கா சதொச இந்த சீனித் தொகையை இறக்குமதியாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள உள்ளதாக ​​துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இது குறித்து இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடப்பட்டதாகவும், லங்கா சதொச நிறுவனத்திற்கு சீனி தொகையை கொள்வனவு செய்யும் போது தாமத கட்டணத்திலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன  கூறினார்.

இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் சீனி லங்கா சதொச ஊடாக சலுகை விலையில் விற்பனை செய்யப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

இதனிடையே சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக நாளை (30) முதல் ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியை 130 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

தற்போது சகல சதொச விற்பனை நிலையங்களுக்கும் சீனியை வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.