July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

7 மாதங்களில் 900 கோடி ரூபா மதிப்புள்ள போதைப் பொருட்கள் மீட்பு: 15,000 பேர் கைது!

File Photo

இலங்கையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 900 கோடி ரூபா மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பெலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கைகளில் கிட்டத்தட்ட 15,000 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில், 473 கிலோ ஹெரோயின், 300 கிலோ ஐஸ் போதைப்பொருள் மற்றும் 3,485 கிலோ கஞ்சா ஆகியவை அடங்குவதாக என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெரும்பாலான போதைப்பொருட்கள் இலங்கையின் தென் கடலுக்கு அப்பால் உள்ள சர்வதேச கடலின் ஊடாக  படகு மூலம் கொண்டு வரப்பட்டுள்ளமை கண்டிறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சுற்றிவளைப்புகளில் கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய 40 முக்கிய சந்தேக நபர்களும், ஹெரோயின் தொடர்பாக 12,890 சந்தேக நபர்களும், ஐஸ் போதைப் பொருள்  தொடர்பாக 1457 பேரும், கஞ்சா தொடர்பாக 8509 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

அத்தோடு இவர்களிடையே சர்வதேச, உள்ளூர் வினியோகஸ்தர்கள் மற்றும் படகு மூலம் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வர உதவியவர்களும் உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு, பொலிஸ், விசேட அதிரடிப்படை, கடற்படை, சுங்கப்பிரிவு, கடலோர காவல்படை மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் ஆகியவற்றின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.