January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை வைத்தியசாலைகளில் உள்ள ஒக்ஸிஜன் அளவை உடனடியாக அறிவிக்குமாறு உத்தரவு

சுகாதார அமைச்சின் உத்தரவை தொடர்ந்து இலங்கையில் உள்ள அரச வைத்தியசாலைகளில் கிடைக்கும் ஒக்ஸிஜன் விநியோகம் தொடர்பான மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றது.

நாட்டில் தொடர்ந்தும் கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டு வரும் நிலையில், சுகாதார அமைச்சு, அரச வைத்தியசாலைகளில் கிடைக்கும் ஒக்ஸிஜன் விநியோகம் தொடர்பான தகவல்களை கோரியுள்ளது.

நாட்டிலுள்ள தீவிர சிகிச்சை பிரிவுகளில், நோயாளர்கள் நிரம்பி வருகின்ற நிலையில், தீவிர சிகிச்சை பிரிவுகள் முழுமை அடையும் அளவை அண்மித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக ஒக்ஸிஜன் தேவைப்படுவதாக சுகாதாரப் பிரிவினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கையில் இரண்டு முக்கிய ஒக்ஸிஜன் விநியோகஸ்தர்கள் இருப்பதாகவும், அவர்களிடம் தற்போதைய தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவு ஒக்ஸிஜன் இருப்பதாக சுகாதார அமைச்சுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு போதுமானளவு  ஒக்ஸிஜன் இருப்பதாக குறித்த விநியோகஸ்தர்கள் சுகாதார அமைச்சுக்கு அறியப்படுத்தியுள்ளார்கள்.

இது இவ்வாறிருக்க, நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் காணப்படும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் தற்போது 700 கட்டில்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் புதிதாக 70 கட்டில்கள், தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இதுவரை செயற்படாத தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கு புதிதாக ஊழியர்களை இணைத்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில் கடமையாற்றுவதற்கான பயிற்சிகளை பெற்று, வேறு விடுதிகளில் சேவை புரியும் ஊழியர்களை அத்தியாவசிய தேவை நிமிர்த்தம், தீவிர சிகிச்சை பிரிவுகளில் கடமைகளில் ஈடுபடுத்துமாறு, வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களுக்கு தேவையான ஒக்ஸிஜன், உரிய முறையில் விநியோகிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வைத்தியசாலைகளில் காணப்படும் ஒக்ஸிஜன் அளவை கணிப்பிட்டு, உடனடியாக அறிவிக்குமாறு அனைத்து வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கும், சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.