January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை மாகாண சபைத் தேர்தல்களை தாமதமின்றி நடத்த வேண்டும்’: இந்தியா வலியுறுத்து

இலங்கை அரசாங்கம் அதிகாரப் பகிர்வு தொடர்பான கடமைகளை நிறைவேற்றுவதற்கான சர்வதேச சமூகத்தின் அழைப்பை, மாகாண சபைத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதன் ஊடாக ஆதரிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம், அனைத்து மாகாண சபைகளும் திறம்பட செயற்பட முடியும் என்பதை உறுதி செய்வதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பி துரைக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தம்பி துரை எம்.பி. இலங்கை தமிழர்கள் பிரச்சினைகள் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கே, வெளியுறவு அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகள் மதிக்கப்பட வேண்டும் என்ற பலமான அறிக்கையைத் தொடர்ந்தே, இந்தியா வாக்களிப்பில் இருந்து விலகிக்கொண்டதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா முன்னெடுக்கும்’ என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் பதிலளித்துள்ளார்.