May 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இருள் அகல தீபம் ஏற்றினால் வாழ்வில் ஒளியேற்றும் தீபாவளி

தீபாவளி என்பது இந்து மக்களின் பிரதான பண்டிகைகளில் ஒன்றாகும்.

தீபம் என்றால் விளக்கு. ஆவளி என்பது வரிசை ஆகும். விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து கொண்டாடும் ஒரு பண்டிகையே தீபாவளி.

சதுர்த்தசியும் அமாவாசையும் சேர்ந்து வரும் நாளிலேயே தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதன்படி தீபாவளி இம்முறை ஐப்பசி 18 அதாவது நவம்பர் 12ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.

அமாவாசைக்கு முன் வரும் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை, சுக்கிலப் பிரதமை இந் நான்கு நாட்களும் தீபாவளியுடன் தொடர்புடைய சிறப்பு நாட்கள் ஆகும்.

இந்தியாவில் திரயோதசியை கொண்டு தமிழர் முதலிய தென் நாட்டவரும் அமாவாசை பிரதமையை கொண்டு குஜராத்தியர், மார்வாரியார் முதலானவரும் தீபாவளியை கொண்டாடுவர்.

இந்நன்னாளில் வரும் சதுர்த்தசி நரக சதுர்த்தசி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. நரகாசுரனை அழித்த தினமானதால் நரக சதுர்த்தசி என்று கூறுவர். தீபாவளித் திருநாளுக்கு புராணக் கதைகள் சொல்லப்படுகின்றன. அவற்றில் நரகாசுரன் கதை முக்கியமானது.

நரகாசுரன் கதை

நரகாசுரனின் இயற்பெயர் பவுமன். திருமால் ஒருமுறை பூமியைத் துளைத்து அசுரர்களை அழிக்கச் சென்ற போது அவரின் ஸ்பரிசத்தில் பூமாதேவிக்குப் பிறந்தவன் தான் பவுமன்.

அசுர வதத்தின்போது பிறந்ததால் அசுர சுபாவம் இவனுக்கு ஏற்பட்டது. மனிதனாக இருந்தாலும் துர்க்குணம் நிறைந்தவனாக இருந்தான்.

தேவர்களையும் மனிதர்களையும் துன்புறுத்தினான். அவன் தன் தாயைத் தவிர வேறு ஒருவராலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தை பிரம்மாவிடம் கேட்டுப் பெற்றான்.

மகாவிஷ்ணு உடன் போர் புரிந்தான். மகா விஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரன் மகா விஷ்ணு மீது அம்பு எய்தான். இந்த அம்பு பட்டு விஷ்ணு மயக்கம் அடைந்தது போல கீழே விழுந்தார்.

சத்தியபாமா இதைக் கண்டு கடும் சினம் கொண்டாள். நரகாசூரனுடன் போர் செய்தார். சத்தியபாமா பூமாதேவியின் அவதாரம் என்று உணராமல் நரகாசுரனும் போரில் ஈடுபட்டான்.

சத்தியபாமாவின் அம்புக்கு நரகாசுரன் பலியானான். இறக்கும் போதே சத்தியபாமா தனது தாய் என்பதை உணர்ந்தான். தேவர்களும் மனிதர்களும் அவனது பிடியிலிருந்து விடுபட்டார்கள்.

நான் இறக்கும் இந்நாளை மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று நரகாசுரன் கேட்டுக்கொண்டான். அதனால் இந்த நன்னாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுவதாக ஒரு கதை கூறப்படுகிறது.

தீபாவளி கொண்டாடும் முறை

தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தலைக்கு தேய்த்து நீராட வேண்டும். நல்லெண்ணெயில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.

அதிகாலை 3:30 தொடக்கம் 5:30 மணிக்குள் நீராட வேண்டும். இதை கங்காஸ்நானம் என்று சொல்வார்கள். உலகில் உள்ள நீர்நிலைகள் எல்லாவற்றிலும் தீபாவளி தினத்தில் கங்காதேவி அமர்கிறாள் என்பது ஐதீகம்.

நீராடிய பின் புத்தாடை அணிவர். புத்தாடையில் மஞ்சள் பூச வேண்டும். வீட்டில் வரிசையாக தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்தல் வேண்டும். வீட்டில் உள்ள இருள் அகன்று அஷ்டலட்சுமிகளின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தாய், தந்தை, பெரியவர்களை வணங்கி ஆசிர்வாதம் பெற வேண்டும். வீட்டில் உள்ளவர்களுக்கு இனிப்புகள், பலகாரங்கள் பரிமாறுதல் மிகவும் சிறப்பானது.

இந்த நல்ல நாளில் ஏழைகளுக்கு உணவு, உடை தானம் செய்வதால் மகாலட்சுமியின் பூரண ஆசி கிடைக்கும்.

கந்த புராணத்தில் ஒரு கதை உண்டு. சிவனை பிரிந்து சென்ற சக்தி பூவுலகு வந்து இருபத்தொரு நாள் நோன்பிருந்து சிவனுடன் இணைந்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்ததாகவும் ஆணும் பெண்ணும் சரிபாதியாக இணையும் நாள் தீபாவளி தினம் என்றும் கூறப்படுகிறது. ஆதலால் இந்துக்கள் இந்நாளை புனித நாளாகக் கருதுகின்றனர்.

ஒருமுறை தீர்க்கதமஸ் என்ற முனிவர் அடர்ந்த இருள் சூழ்ந்த காட்டிலே தனது மனைவி பிள்ளைகளுடன் வசித்து வந்தார். ஒளியைக் காண முடியாமல் துன்பப்பட்டார். கொடிய மிருகங்களின் துன்புறுத்தல்களுக்கும் ஆளானார்.

இந் நேரத்தில் இறைவனை நினைக்கத் தவறவில்லை. மகாவிஷ்ணுவை நினைத்து இந்த இடம் ஒளிமயமாக பிரகாசிக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார். சிறிது நாட்கள் செல்ல சனாதன முனிவர் அவ்விடம் வந்தார்.

அவரிடம் தீர்க்கதமஸ் தன் சந்தேகத்தை கேட்டார். மனிதன் பட்டினி இருந்து, உடலை வருத்தி, தவம் இருந்து இருளில் இருந்து விடைபெற விரதம் அனுட்டிக்கின்றான். மனமகிழ்ச்சிக்கு சுலபமான வழிகள் இல்லையா என கேட்டார்.

அதற்கு பதிலளித்த சனாதன முனிவர் தீவிர விரதங்களால் மட்டும் பரம்பொருளைக் காணமுடியும் என்று வேதங்கள் வழி ஏதும் கூறவில்லை.

தீர்த்தமாடி புத்தாடை அணிந்து, இனிப்பு பட்சணங்களை அருந்தி, ஏழை எளியோருக்குக் கொடுத்து தீபங்கள் ஏற்றி நாம் மனமகிழ்ந்து கொண்டாடினால் நாம் துன்பமாகிய இருளில் இருந்து விடுபடலாம் என்று விடையளித்தார்.

இந்த விரதத்தை எப்படி நோக்க வேண்டும் என தீர்க்கதமஸ் முனிவர் அவரிடம் வினவினார். அதற்கு முனிவர் ஐப்பசி மாதம் தேய்பிறை திரயோதசி அன்று மகா பிரதோஷ பூஜை செய்து யம தீபம் ஏற்ற வேண்டும்.

எமதர்மராஜனை பிரார்த்தனை செய்து மரணம் ஏற்படாமல் காக்கும்படி பிரார்த்திக்க வேண்டும். மறுநாள் நரக சதுர்த்தி அன்று நரகத்திற்கு செல்லாமல் இருக்கவும் நரகத்தில் இருப்பவர்கள் விடுபடவும், கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும்.

எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம்,மலர்கள், நீர், புத்தாடை , இனிப்புப் பண்டங்கள், தீபம், இனிப்பு மருந்து, நெருப்புப்பொறி ஆகியவற்றை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று கூறினார்.

எண்ணையில் இலக்குமி தேவியும், அரப்பு பொடியில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமாதேவியும், குங்குமத்தில் கௌரியும், மலர்களில் மோகினிகளும் நீரில் கங்காதேவியும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்பு மருந்தில் தன்வந்திரியும், இனிப்பு பண்டங்களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் இருந்து நமக்கு அருள் புரிவார்கள் என்றும் இவற்றில் கற்பூர ஆரத்தி காட்டி வணங்கினால் நம் குடும்பத்தாரை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்து வருவார்கள் என்றும் அவர்களது நல்லாசி என்றும் கிடைக்கும் என்று சனாதன முனிவர் விளக்கமாக கூறினார்.

தீபாவளிப் பண்டிகைக்கும் இதற்கும் தொடர்பு இருப்பது போல இக்கதையை அறியமுடிகிறது. இருள் அகல தீபம் ஏற்றினால் எம் வாழ்வில் ஒளி பிறக்கும் என்பது நம்பிக்கை.

தீபாவளிக் கொண்டாட்டங்கள்

இந்தியாவைல் தீபாவளிப் பண்டிகையை ஒவ்வொரு இனத்தவரும் கொண்டாடுவதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன. வட மாநிலங்களில் ஐந்து நாட்கள் கொண்டாடுவர்.

ஐந்தாவது நாள் எமதர்ம வழிபாடு நடக்கின்றது. எமதர்மராஜன் தன் தங்கை யமுனைக்கு தீபாவளியன்று பரிசுப் பொருள் வழங்கி மகிழ்ந்ததாகவும் அதற்கு நன்றி தெரிவிப்பதற்காக யமுனை விருந்துபசாரம் கொடுத்ததாகவும் ஐதீகம் உள்ளது. அவ்வழக்கத்தை வட மாநிலத்து மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

ஆண் சகோதரர்கள் தங்கள் பெண் சகோதரிகளுக்கு பரிசுப்பொருட்கள் வழங்குகின்றார்கள். அதற்கு பெண் சகோதரிகள் தங்கள் நன்றிகளைத் தெரிவிப்பதற்காக விருந்தளித்து மகிழ்வர்.

இராமாயணத்தில் இராமர் வனவாசம் முடிந்து சீதை, இலக்குமணனுடன் திரும்பிய நாளை அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் மகிழ்ந்தனர். இந்நாளையே மக்கள் தீபாவளியாக கொண்டாடுவதாக கருதப்படுகிறது.

சீக்கியர்கள் 1577-இல் பொற்கோவில் கட்டடப் பணி ஆரம்பித்த நாளை தீபாவளி தினமாக கொண்டாடுகிறார்கள். சமணர்கள் மகாவீரர் முக்தி பெற்ற நாளை நினைவுகூர்ந்து தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

ஒடிசா மாநிலத்தில் முன்னோர்கள் வழிபாடு நடைபெறுகிறது. அன்று அவர்களுக்கு படையல் படைத்து வழிபட்டால் ஆசி கிடைப்பதாக உணர்கிறார்கள்.

திருமணம் முடித்தபின் வரும் முதலாவது தீபாவளியை மணமக்கள் தலைத் தீபாவளி என்று விமரிசையாக கொண்டாடுவர்.

தீபாவளித் திருநாளில் மக்கள் தங்கள் கலாச்சாரத்திற்கு ஏற்ப புத்தாடை அணிந்து இனிப்பு பண்டங்கள் பரிமாறி மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள். குழந்தைகள் பட்டாசு, மத்தாப்புக்களை வெடிக்க வைத்து மகிழ்கிறார்கள்.

புராணக் கதைகள் பல காரணங்களைக் கூறினாலும் எல்லோரும் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதையே வலியுறுத்துகின்றன.

இந்தத் தீபாவளி திருநாள் மக்கள் வாழ்வில் இருளை அகற்றி ஒளியேற்ற வேண்டும். ஒவ்வொருவர் மனதிலும் உள்ள அகங்காரம், பொறாமை, கர்வம், கோபம் போன்ற தீய குணங்களை அகற்றி இந்நாளில் அனைவரிடத்திலும் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் தங்கட்டும்.

-தமிழ் வாணி (பிரான்ஸ்)