July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை பெற்றுத்தர தமிழக அரசும் எம்.பி.க்களும் முயற்சிக்க வேண்டும்’

தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை பெற்றுத் தர தமிழக அரசும் எம்.பி.க்களும் முயற்சி செய்ய வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈழத்தமிழர்களின் குடியுரிமை தொடர்பில் வீரமணி அறிக்கை வாயிலாக இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது, ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை பெற்றுத் தர, தமிழக அரசும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவது, மனிதாபிமான அடிப்படையில் மிக மிக முக்கியமானதாகும்.

தமிழ் நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர் முகாம்களில் தங்குமிடம் சரியான பராமரிப்பின்றி, அவர்களுக்குப் போதிய வசதி வாய்ப்புகளை அளிக்காது, முன்னைய ஆட்சியில் அவர்கள் எப்படியோ வாழ்ந்த நிலையை மாற்றுபவர் தமிழக முதல்வர் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக சட்ட மன்றத்தில் ஈழத்தமிழர்கள் அநாதைகள் அல்ல என்று உரத்த குரலில் முழங்கியது நம்பிக்கையை ஊட்டி இருப்பதாக அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர் நலன்களைப் பேணிக் காத்திட 317.40 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதற்கு வீரமணி வரவேற்பு தெரிவித்திருக்கிறார்.

அகதிகள் முகாம் என்பதை மாற்றி மறுவாழ்வு விடுதிகள் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அதன்மூலம் முதல்வர் இலங்கைத் தமிழர்களுடனான நமது தொப்புள் கொடி உறவு என்றும் அறுக்கப்படக் கூடாத உறவு என்பதை உறுதிப்படுத்தி உலகத்துக்கு அறிவித்திருப்பதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.