November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான வாழ்வாதார நலத்திட்டங்களை ஸ்டாலின் அறிவித்தார்

தமிழ் நாட்டிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் வாழ்வாதார மேம்பாட்டு நிதியாக  5 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய தமிழக சட்டப்பேரவை விதி எண் 110 இன் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர் மீது பதிவு செய்துள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வழக்குகள் நிறைவடைந்த பின்னர், இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை தமிழ் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு 2,500 ரூபாவில் இலிருந்து 10,000 ரூபா ஆகவும், கலை, அறிவியல் மாணவர்களுக்கு 3000 ரூபாவில் இருந்து 12,000 ரூபா ஆகவும் ஆகவும், இளநிலை தொழிற்கல்வி மாணவர்களுக்கு 5000 ரூபாவில் இருந்து  20,000 ரூபா ஆகவும் உதவித்தொகை உயர்த்தப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.

இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பணக்கொடை வழங்கப்படுவதுடன் இந்த பணக்கொடை உயர்த்தி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

“இலங்கை தமிழ் அகதிகளுக்கு  108  கோடி ரூபா மதிப்பீட்டில் நடப்பாண்டில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும்.

பொறியியல் படிப்புக்குத் தேர்ச்சிபெற்ற மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில், முதல் 50 மாணவர்களுக்கு, அனைத்துக் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும்.

முகாம்களில் உள்ள மின் வசதி, கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு தற்போது 20 கிலோவிற்கு மேல் வழங்கப்படும் அரிசிக்கு, கிலோ ஒன்றிற்கு 57 பைசா வீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதனை இனி ரத்து செய்து, அவர்கள் பெறும் முழு அரிசி அளவும் விலையில்லாமல் வழங்கப்படும்.

முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு 1,296/- ரூபாய் மதிப்பில் சேலம் இந்திய உருக்காலை நிறுவனம் மூலம் உயர்த்தப்பட்ட வீதத்தில் பாத்திரங்கள் வழங்கப்படும்.”

என சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.