தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை கிடைக்க திமுக தொடர்ந்து வலியுறுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
அதேபோல் இலங்கை தமிழர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என முதல்வர் உறுதி அளித்திருப்பதாகவும் கனிமொழி கூறியுள்ளார்.
தூத்துக்குடி சென்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம், இலங்கை தமிழர் அகதி முகாம்களின் பிரதிநிதிகள் மனுவொன்றை கையளித்துள்ளனர்.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி,தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள இலங்கை தமிழர்கள் வசிக்கும் 9 முகாம்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதன்போது கனிமொழியை சந்தித்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் உள்ள இலங்கை தமிழர் முகாம்களின் பிரதிநிதிகள் தங்களது வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பாக மனு வழங்கியிருப்பதாக கனிமொழி தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி முகாமில் ,இலங்கை தமிழர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் கனிமொழி கூறியுள்ளார்.
இலங்கை தமிழர்களில் பெரும்பாலானோர் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என, மத்திய அரசை திமுக வலியுறுத்திவருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சிலர் தங்களது சொந்த நாட்டுக்கு செல்லவும் விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் அதனையும் பரிசீலிக்க வேண்டும் வேண்டுமெனவும் கனிமொழி இதன்போது தெரிவித்துள்ளார்.