May 9, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி; தமிழகத்தின் முதலமைச்சராகிறார் மு.க ஸ்டாலின்!

கடந்த 10 ஆண்டுகால போராட்டத்திற்குப் பின்னர் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக.

திமுகவின் மறைந்த தலைவர் மு. கருணாநிதியின் மகனான ஸ்டாலின் எதிர்வரும் மே 7 ஆம் திகதி தமிழகத்தின் 8 ஆவது முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

1953 மார்ச் முதலாம் திகதி முத்துவேல் கருணாநிதி – தயாளு அம்மாள் தம்பதியரின் மூன்றாவது பிள்ளையாக பிறந்தார் மு க ஸ்டாலின்.

ரஷ்ய ஜனாதிபதி ஸ்டாலின் நினைவாக அவரது பெயரையே தன் மகனுக்கு சூட்டினார் கருணாநிதி.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிருத்துவ கல்லூரியில் பள்ளிப் படிப்பையும், விவேகானந்தா கல்லூரியிலும் மாநிலக் கல்லூரியிலும் கல்லூரிப் படிப்பையும் முடித்தார் ஸ்டாலின்.

பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே, 67 ஆம் ஆண்டில் கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பை ஏற்படுத்தி அரசியலில் ஈடுபடலானார். அப்போது அவருக்கு 14 வயது மட்டுமே.

அப்போது முதல் படிப்படியாக சட்டமன்ற உறுப்பினர், சென்னை மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என்று நீண்டு, பின்னர் திமுகவின் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு, 2021 சட்டமன்றத் தேர்தல் முதல்வர் வேட்பாளர் என மிக நீண்ட நெடிய பயணத்தை அரசியலில் மேற்கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

கலையிலும் இருந்த மிகுந்த ஆர்வத்தால் அரசியலில் ஈடுபட்ட அதே காலகட்டத்தில் ‘முரசே முழங்கு’ திண்டுக்கல் தீர்ப்பு’, நீதி தேவன் மயங்குகிறான்’, ‘நாளை நமதே’ என திராவிடக் கொள்கைகளை விளக்கும் பல நாடகங்களிலும் அவர் நடித்துள்ளார்.

திரைத்துறையிலும் மக்கள் ஆணையிட்டால், ஒரே ரத்தம் ஆகிய படங்களிலும், குறிஞ்சி மலர் என்ற தொலைக்காட்சி நாடகத்திலும் ஸ்டாலின் நடித்தார்.

வட்டப் பொறுப்பாளர் முதல் மாநில முதல்வர் வரை

பின்னர் தீவிர அரசியலில் மட்டும் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட மு.க. ஸ்டாலின், சென்னை மாவட்ட 75 ஆவது வட்ட பொறுப்பாளராக திமுகவில் முதல் கட்சி பதவியை வகித்தார்.

1968 ஆம் ஆண்டு நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் திமுகவுக்காக கடுமையாக பிரச்சாரம் செய்ததைத் தொடர்ந்தே அவருக்கு இந்தக் கட்சிப் பதவி கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து 1973 இல்  திமுகவின் பொதுக்குழு உறுப்பினராகவும், 1979 இல் இளைஞரணி அமைப்பாளர்களில் ஒருவராகவும், 1983 இல் இளைஞரணி செயலாளராகவும், 2008 இல் பொருளாளராகவும், 2017  செயல் தலைவராகவும் ஆனார் மு.க. ஸ்டாலின்.

2018 திமுக தலைவர் கருணநிதியின் மறைவுக்குப் பின்னர் கட்சித் தலைவராக ஸ்டாலின் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

1976 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் கொண்டுவந்த மிசா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு ஓராண்டுக் காலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

1996 ஆம் ஆண்டு மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை மேயராக, முழுமையாக பதவி வகித்தார். சிங்காரச் சென்னை என்ற திட்டத்தையும் கொண்டு வந்தார்.

2001 ஆம் ஆண்டும் சென்னையின் மேயராக பதவி வகித்தார். அதே காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்ததால் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இப்படி இருமுறை மேயராக பதவி வகித்தார் ஸ்டாலின்.

அதேநேரம் 1984-ம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் சட்டமன்றத்திற்கு முதல் முறை போட்டியிட்டு தோல்வி கண்டார். 1986 ஆம் வருடம் அதே ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்றார்.

மீண்டும் 1991 இல் அதே தொகுதியில் தோல்வியும், பின்னர் 1996, 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் வெற்றியும் பெற்ற ஸ்டாலின், 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு தேர்வானார்.

தற்போது 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வராக வாகை சூடியுள்ளார். 2006-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது உள்ளாட்சித்துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

தமிழ்நாட்டின் முதல் துணை முதலமைச்சராக 2009 ஆம் ஆண்டிலும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக 2016 ஆம் ஆண்டிலும் பதவி வகித்தார் ஸ்டாலின்.அப்போது திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 89.

குடும்ப அரசியல், ஊழல், நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கும் விமர்சனங்களுக்கும் நடுவே, திமுக இம்முறை ஆறாவது தடவையாக தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்திருக்கின்றது.

முழு உலகும் எதிர்கொண்டிருக்கின்ற கொரோனா சுகாதார அச்சுறுத்தல் ஸ்டாலின் தலைமையிலான தமிழகத்தின் புதிய அரசுக்கும் மிகப்பெரும் சவாலாக அமையப்போகின்றது.

அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சி, மாற்றங்கள் எவ்வாறு இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்…